

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும், ஒரு பிரிவினர் எதிர்ப்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் விவசாயத் துறையைக் கொண்டு சேர்க்கும் நிலைக்கு ஆளாகும். சட்டங்கள், குறைந்தபட்ச ஆதார விலை என்பது இல்லாமல் போகும். உணவுப் பொருட்கள் பதுக்கல் அதிகரித்து நாட்டில் செயற்கை பஞ்சமும் விலை ஏற்றமும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.
இந்தச் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உ.பி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராடி வருகிறார்கள். 100 நாட்களை நோக்கிச் செல்லும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆளுங்கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரித்து வருகின்றன.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்தும், விவசாயச் சட்டங்களை ஆதரித்தும், இருவகையான ஆர்ப்பாட்டங்கள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டன.
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.பி.ஏ. நுழைவுவாயில் முன்பு ஒன்றுகூடிய ஜி.கார்த்திகேயன், திருவாரூர் சுந்தரராஜன், சு.சீனிவாசன், முனு ஆதி, திவாகர், பாபு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக கோஷம் போட்டனர். சட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படப்போகும் நன்மைகளை எடுத்துக் கூறிப் பேசினர்.
டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவுவாயில் அருகே மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத் தலைமையில் பல வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் கிரிராஜன், நிர்வாகிகள் தேவராஜன், அறிவழகன், நடராஜன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் காமராஜ், பட்டுக்கோட்டை ராஜேந்திரன், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பார்வேந்தன், சீனிவாசராவ், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், வழக்கறிஞர்கள் உதயகுமார், பார்த்தசாரதி என்று நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.