

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் தொடங்கும் பனிக் காலம் பிப்ரவரி மாதத்தில் முடிவடையும். கடந்தாண்டில் டிசம்பர் மாதம் வரை புயல், பலத்த மழைப் பொழிவு இருந்ததால் பனிக் காலம் பிப்ரவரியில்தான் தொடங்கியது. தாமதமாக தொடங்கியபோதும் உறைபனி கொட்டுகிறது.
இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் கூறும்போது, ‘‘உதகை நகரில் கடந்த இரு தினங்களாக கடுமையான உறைபனிப் பொழிவு ஏற்பட்டுவருகிறது. அரசினர் தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 1 டிகிரி செல்சியஸ் பதிவானது. காலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக அவிலாஞ்சியில் பூஜ்யம் டிகிரி பதிவாகியுள்ளது” என்றார்.
உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தேயிலை மற்றும்காய்கறிப் பயிர்கள் கருகுவதால், விவசாயிகள் அவசரம் அவசரமாக அறுவடை செய்துவருகின்றனர். தேயிலை செடிகளை பனியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பனை ஓலை, வைக்கோல்போட்டு விவசாயிகள் மூடுகின்றனர்.
பனியின் தாக்கத்தால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ளதாவரங்கள், புற்கள் காய்ந்துவிட்டன. தேக்கு மரங்களில் இலைகள்காய்ந்து உதிர்ந்து, மரங்கள் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன. இதனால் உணவு தேடி வன விலங்குகள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.