Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு; ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயம்: புதிய விதிமுறையை அமல்படுத்த தேர்வு வாரியம் முடிவு

ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயித்து கடந்தஆண்டு ஜனவரி மாதம் வெளியானஅறிவிக்கையை நடைமுறைப்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதேநேரம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 100 சதவீதம் நேரடி நியமன முறையிலும், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் எஞ்சிய 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் கிடையாது. 57 வயது நிரம்பியவர்கள்கூட விண்ணப்பிக்க முடியும்.

2020-ல் அறிவிக்கை வெளியீடு

அதேபோல், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தகுதித்தேர்வு (டெட்) எழுதவும்வயது வரம்பு இல்லை. இந்நிலையில், ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாத அரசிதழில் ஓர் அறிவிக்கை வெளியானது. அந்த அறிவிக்கை வெளியான விவரம் சில மாதங்கள் கழித்த பின்னரே தெரிய வந்தது. அப்போது இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பிஎட். பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், இந்த அறிவிக்கைகுறித்து பள்ளிக்கல்வித் துறையிலிருந்து எ்வ்வித விளக்கமும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்த அச்சம் ஆசிரியர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்தது.இந்நிலையில், அரசிதழ் அறிவிக்கையை நடைமுறைப்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

உயர் அதிகாரி தகவல்

அதன்படி, ஆசிரியர் பணி நியமனங்களுக்கு இனிமேல் வயது வரம்பு 40 ஆக பின்பற்றப்பட உள்ளது. அதேநேரம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 45 ஆக நிர்ணயிக்கப்பட இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொதுவாக, தமிழக அரசு பணிகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு தளர்த்தப்படுவது வழக்கம். டிஎன்பிஎஸ்சி நடத்தும் குருப்-1 தேர்வுக்கு வயது வரம்புபொதுப்பிரிவினருக்கு 32 ஆக உள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. குருப்-2 தேர்வில் சிலபணிகளுக்கு பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30 மற்றும் 40 ஆக இருக்கிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் கிடையாது.

தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுவோரில் பெரும்பாலானோர் 40 வயது கடந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஆசிரியர் தகுதித்தேர்விலும் 35, 40 வயது கடந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். எனவே, ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு 40 அல்லது 45 ஆக நிர்ணயிக்கப்படுவது 40 வயதை கடந்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடும்.

பிப்ரவரியில் தேர்வு அட்டவணை

இதற்கிடையே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல தனியார் பயிற்சி மையங்கள் ஏற்கெனவே பயிற்சி வகுப்புகளை தொடங்கி நடத்தி வருகின்றன.

இந்நிலையில், புதிய ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை பிப்ரவரி இறுதியில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x