பிப்.14-ம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர், துணை முதல்வருடன் தனித்தனியாக ஆலோசனை: கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு

பிப்.14-ம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர், துணை முதல்வருடன் தனித்தனியாக ஆலோசனை: கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு
Updated on
2 min read

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிப்.14-ம்தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கூட்டணிகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜன.19-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை, முதல்வர்பழனிசாமி சந்தித்து கோரிக்கை மனுஅளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறும்போது, காவிரி - குண்டாறு இணைப்பு, கல்லணை புனரமைப்பு மற்றும் பவானி நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு திட்டம் ஆகியவற்றைதொடங்கி வைக்கவும் வரும்படிபிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், பிரதமரும் வருவதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, வரும் 14-ம் தேதி சென்னைவருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பிரதமரின் வருகை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பிப்.14-ம் தேதி காலை 7.50 மணிக்குடெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி. அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம்,விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கம் செல்கிறார். அங்கு காலை 11.15 முதல் 12.30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின் 12.35 முதல் 12.50 வரை முக்கிய நபர்கள் சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, சாலை வழியாக மீண்டும் ஐஎன்எஸ் அடையாறுசெல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து பகல்1.35 மணிக்கு தனி விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.

இதில், பகல் 12.35 முதல் 12.50 வரையில் ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் தனித்தனியாக பிரதமர் பேச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, சசிகலா வருகை தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் பேசி இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

4 அடுக்கு பாதுகாப்பு

இதற்கிடையே, நிகழ்ச்சி நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம்மற்றும் விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம்வரையுள்ள சாலையில் கூடுதல் பாதுகாப்பு போடவேண்டிய இடங்கள் போன்றவற்றை மத்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

சென்னை காவல் துறை சார்பில்அரங்கத்துக்கு வெளியே 4 அடுக்கு பாதுகாப்பு போட இருப்பதாகவும், 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in