

முதல்முறையாக வாக்களிக்க உள்ள புதிய வாக்காளர்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டங்கள் அவ்வப்போது நடந்து வந்தன.
இந்தநிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.
கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் சின்னமான ‘டார்ச் லைட்'டை கையில் பிடித்த படி காலை 11 மணியளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்தார். மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழுவில் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொது செயலாளர்கள் சந்தோஷ் பாபு, மவுரியா உள்ளிட்ட 850 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் சட்டப்பேரவை தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிகளை கமல்ஹாசன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். நேற்று பிற்பகல் மகளிர் அணி, மாணவரணி, இளைஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்றுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. நேற்று மாலை நடந்த கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதற்கிடையே, பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார். தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, தனித்துக் களம் காண்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரமும் கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணம், அதை தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த மர்ம மரணங்களின் பின்னணி ஆகியவற்றை அறியும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. இதற்கு மேலும் அலட்சியம் காட்டாமல் உண்மைகளை தமிழக அரசு வெளிக்கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாக கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஊழல் அரசியல் செய்யும் கட்சிகள். ஊழல் அரசியல் செய்யும் கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது. அவர்களுடன் ஒரு போதும் நாம் சேர மாட்டோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் முதல்முறையாக வாக்களிக்கும் புதிய வாக்காளர்கள், நடுநிலை வாக்காளர்கள் தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றனர். எனவே, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை, செயல்பாடுகளை முதன்முறையாக வாக்களிக்க உள்ள புதிய வாக்காளர்களை நேரில் சந்தித்து எடுத்துரைக்க வேண்டும்
என்னுடைய மகள்கள் கட்சி கூட்டத்தை பார்க்க வருகிறேன் என்றனர். மக்கள் நீதி மய்யத்தில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. எனவே, கட்சி நிகழ்வுகள் தொடர்பாக தொலைக்காட்சிகளில் ஒலிப்பரப்பப்படுவதை மட்டும் பார்த்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.