

கோவை மாநகராட்சியில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை வார்டுதோறும் அலுவலர்கள் நடத்தி வருகின்றனர்.
‘தேங்காய் மூடிகள், மூடிவைக்காத தண்ணீர் தொட்டிகள், குப்பைகளில் நீருடன் காணப்படும் பாலீதின் பைகள், பாலிதீன் பாட்டில்கள், தண்ணீர் தேங்கும் பழைய டயர்கள், நீண்டகாலமாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பை, குப்பை அகற்றப்படாமல் இருக்கும் குப்பைத் தொட்டிகளில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற அபாயகரமான நோய்களை பரப்பும் ஏடீஸ் கொசு உற்பத்தியாகும். எனவே இவற்றை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பேணுங்கள்’ என்று பிரச்சாரமும் செய்து வருகின்றனர். அதற்காக மக்கள் கூடும் இடங்களில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இதே பிரச்சாரத்தை செய்து, ஏடீஸ் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டும் என்கிறார்கள் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள்.
மாநகராட்சி அலுவலக வளாத்திற்குள்ளேயே இத்தகைய கொசுக்கள் வளர வாய்ப்புள்ள அளவுக்கு சுகாதாரம் சீர்கேடு உள்ளதாகக் கூறுகின்றனர்.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரவுண்ட் வந்ததில் கிடைத்த புகைப்படங்கள்..
1. மாநகராட்சி அலுவலகத்துக்கு பின்புறம், அம்மா மூலிகை உணவகம் பகுதியில் ஒரு கழிவு நீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து நீண்டகாலமாக வெளியேறிய கழிவுநீரால் இந்தப் பகுதி முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. இங்கே வாகனம் நிறுத்துபவர்கள் பலர் வழுக்கி கீழே விழும் நிலை உள்ளது.
2. மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான விளம்பர பலகைகள், அலுவலக வளாக தென்கோடியை ஆக்கிரமித்துள்ளன. கிழிந்த பிளக்ஸ் பேனர்கள், துருவேறிக் கிடக்கும் இரும்பு குழாய்கள் என பலவற்றிலும் மழைநீர் தேங்குவதும், வெயில் அடித்தால் காய்வதுமாக உள்ளன. இதில் ஏடீஸ் கொசுக்கள் பெருக அதிமான வாய்ப்புள்ளது
3. அம்மா மூலிகை உணவகத்துக்கு மேற்கு வாசல் பகுதியில் 2 குப்பைத்தொட்டிகள் உள்ளன. அதில், பெரிய குப்பைத் தொட்டியில் குப்பை நிரம்பி வழிந்துள்ளது.
மற்றொரு குப்பைத்தொட்டியில் பாதியளவு குப்பை உள்ளது. இவற்றினூடே பாலிதீன் பைகள், பாட்டில்கள் பாதியளவு நீருடன் திறந்த நிலையில் உள்ளன. போதாக்குறைக்கு, இங்கேதான் சிறுநீரும் கழிக்கின்றனர்.
4. மாநகராட்சி வளாகத்தில் ‘நம்ம டாய்லெட்’ பெட்டிகள் உள்ள பகுதிக்கு அருகே பொதுமக்கள் கழிப்பிடம் மிக மோசமாக சிதிலமடைந்து கிடக்கிறது. இதற்கிடையே மாநகராட்சி குப்பை, பல மாதங்களாக போடப்பட்டு மக்கியும், மக்காமலும் உள்ளது. இதனை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் கொண்டு வருகிறார்களோ இல்லையோ, வடகிழக்கு பருவமழை தொடர்ந்தால், கொசுக்களுக்கு இது புகலிடமாகி விடும்.
இந்த கழிப்பிடத்துக்கு தென்புறம் உள்ள இன்ஜினீயரிங் பிரிவு அலுவலகம் பழுதடைந்து காணப்படுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான சிறிய, பெரிய வாகனங்களின் பழுதடைந்த, உபயோகமற்ற டயர்கள் நூற்றுக் கணக்கில் பல ஆண்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த டயர்களுக்குள் மழைநீர் புகுந்து கொசுக்கள் முட்டையிட வாய்ப்புள்ளது.
இந்த டயர்களுக்கு மேலே பாலிதீன் காகிதங்கள் போர்த்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கி விடாதிருக்கவே பாலிதீன் பைகளை போர்த்தியுள்ளோம் என்று தெரிவித்தனர் இந்த அலுவலகத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள்.