Published : 12 Feb 2021 03:17 AM
Last Updated : 12 Feb 2021 03:17 AM

காட்டுமன்னார்கோவில் அருகே நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சாலையோர வீடுகள் அகற்றம்; கிராம மக்கள் எதிர்ப்பு: விவசாய சங்கத் தலைவர் கைது

காட்டுமன்னார்கோவில் அருகேதேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சாலையோர வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டபோது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விவசாய சங்கத் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக அச்சாலையை ஓட்டியுள்ள பகுதிகள் அளவீடு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், இடத்தை காலி செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி, இடத்தை காலி செய்ய அப்பகுதி மக்கள் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீரானந்தபுரம் கிராமத்தில் வீடுகள் மற்றும் காலி இடங்களை அகற்ற என்எச்ஏஐ-யின் முதன்மை பொதுமேலாளர் சிவக்குமார், தேசிய நெடுஞ்சாலை வட்டாட்சியர் தனபதி, காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் ராமதாஸ், சிதம்பரம் சார் ஆட்சியரின் தனி உதவியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீஸார் பொக்லைன் இயந்திரத்துடன் சென்று வீடுகளை அகற்றமுயன்றனர்.

அதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் காவிரி டெல்டா பாசன சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் இயந்திரத்தை தடுத்து நிறுத்தினர். ஆனால்கால அவகாசம் தர முடியாது எனக் கூறி அதிகாரிகள் வீடுகளைத்தொடர்ந்து இடித்துக் கொண்டிருந்த னர். இதனால், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இளங்கீரன் போலீஸாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இளங்கீரன் மீதுபோலீஸார் வழக்குப்பதிவு செய்து,அவரை கைது செய்தனர். இதற்கு அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கடும் எதிப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இளங்கீரன் மயக்கமடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சாலை விரிவாக்கத் துக்காக 10-க்கும் மேற்பட்ட வீடுகளை அதிகாரிகள் தொடர்ந்து இடித்தனர். இப்பிரச்சினையால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x