

நதிநீர் இணைப்பை செயல்படுத்த அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக மாநாட்டில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
‘தேசிய நீர்வழிப் பாதைகள் மூலம் நதிநீர் இணைப்பு’ என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. விஐடி பல்கலைக்கழகம் மற்றும் நவாட் டெக் அமைப்பு இணைந்து மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. மாநாட்டைத் தொடங்கிவைத்து வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியதாவது:
நதிநீர் இணைப்பை வலியுறுத்தி மாநாடு நடத்தப்படுவது வரவேற்கத் தக்கது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறி யாளர்கள் உள்ளனர். அதனால் தான் பாலைவன பூமியான ராஜஸ்தானில்கூட இந்திரா காந்தி கால்வாய் திட்டம் சாத்தியமானது.
எனவே, நதிநீர் இணைப்பையும் சாத்தியப்படுத்த முடியும். இதற் கான தொழில்நுட்ப வலிமை நம்மிடம் உள்ளது. ஆனால், அரசியல் ரீதியான சிக்கல்களால் அதை செயலாக்க முடியவில்லை.
நதிநீர் இணைப்பால் ஒரு மாநிலத்துக்கு இழப்பும், இன்னொரு மாநிலத்துக்கு வளமும் கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. அது சரியல்ல. நதிநீர் இணைப்பு மூலம் ஒட்டுமொத்த தேசமும் நீடித்த வளர்ச்சியைப் பெற முடியும். எனவே, நதிநீர் இணைப்பை செயல்படுத்த அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தனது தலைமை உரையில் கூறியதாவது:
நதிநீர் இணைப்புக்காக தேசிய நீர் மேம்பாட்டு ஆணையம் 1982 முதல் 2013 வரை ஏராளமான பரிந்துரைகளை அளித்துள்ளது. இதுவரை அவை செயல்படுத் தப்படவில்லை. நதிகளை இணைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 200 டிஎம்சி தண்ணீருக்காக கர்நாடகத்துடன் சண்டையிடுகிறோம். கர்நாடகத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் அரபிக்கடலில் கலக்கிறது.
அதேபோல தமிழகத்தில் சிறிதும் பெரிதுமாக 95 நதிகளும், 39 ஆயிரம் ஏரி, குளங்களும் உள்ளன. ஆனாலும்கூட தமிழகத்தில் தற்போது பெய்த மழையில் பெருமளவு தண்ணீர் கடலுக்குதான் சென்றுள்ளது.
வெள்ள சேதங்களை கட்டுப்படுத்த மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்படுவது இல்லை. நீர்நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு நதிநீர்ப் பாதை களை உருவாக்குவது மிக அவசியம். இவ்வாறு ஜி.விசுவநாதன் கூறினார்.
முன்னதாக நவாட் டெக் நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.காமராஜ் பேசும்போது, ‘‘நீர்வழிப் பாதைகள் மூலம் வேளாண் சாகுபடி அதிகரிப்பு, அதிக மின் உற்பத்தி, சிக்கல் இல்லாத போக்குவரத்து வசதி போன்றவை சாத்தியமாகும்’’ என்றார்.
மாநாட்டில் நதிநீர் இணைப்பு தொடர்பாக தொழில்நுட்ப அமர்வு, அரசியல் அமர்வு ஆகியவை நடைபெற்றன. அரசியல் அமர்வில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பாமக முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டின் 2-ம் நாளான இன்று விவசாயம், சுற்றுச்சூழல் தொடர்பான அமர்வுகள் நடக்கின்றன. இறுதியாக தமிழக ஆளுநர் கே.ரோசய்யா நிறைவுரை ஆற்றுகிறார்.