

“இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. ஆனால் இந்தி மொழியை விரும்பி படிப்பதை யாரும் எதிர்க்கக் கூடாது” என்று மத்திய கனரக தொழில்கள் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. ஆனால், தமிழகத்தில் வசதிபடைத்தவர்களும், பணம் படைத்தவர்களும் தங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் மட்டும் இந்தி படித்தால் போதுமா? இந்தி படிக்கும் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் அழிந்துவிட்டதா? இந்தி படித்ததால், அம்மாநிலத்தவர்கள் எந்த அளவுக்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது ஆராயப்பட வேண்டும்.
தமிழகத்தில், பிரெஞ்சு மொழியை படிக்கும்போது, இந்தியை மாணவர்கள் ஏன் படிக்கக் கூடாது? தமிழக மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியை படித்தால் அவர்களை தண்டிக்க யாருக்கும் உரிமை இல்லை. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியை விரும்பி படிப்பதை எதிர்க்கக் கூடாது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் தலைமையில் பலர் என்னை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ‘அணுஉலை எதிர்ப்பு போராட்டம் குறித்தும், அணுஉலைகளை மூடவேண்டும்’ என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டது. அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்களுக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்களிடம் தெரிவித்தேன்.
ரயில் பயண கட்டண உயர்வு மக்களுக்கான தண்டனை இல்லை என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.