Published : 12 Feb 2021 03:17 AM
Last Updated : 12 Feb 2021 03:17 AM

திமுகவைபோல அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை: உடுமலையில் தொழில்நுட்ப ‌அணியினருடனான கூட்டத்தில் முதல்வர் உறுதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ‌பகுதி பிரச்சாரத்தில் முதல்வர்பழனிசாமி பேசும்போது, ‘‘பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கும்ஒரே கட்சி திமுகதான். பெட்டிகளுக்கும், திமுகவுக்கும் அதிக அளவில் தொடர்பு இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் 1100 என்ற எண்ணுக்கு புகார் மனு அளிக்கும் திட்டம், இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும்.

5 லட்சம் முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 ‌வழங்கப்படும். 3 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வரும்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரே அரசு அதிமுக அரசுதான்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக பெரும்பான்மை பெற்று அதிமுக அரசு மீண்டும் அமையும்’’ என்றார்.

விரைவில் தடுப்பணை

முன்னதாக, மடத்துக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர்பேசும்போது, "ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைப்பவர்கள்தான் விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும். ஆகவேதான், அவர்களின் துன்பங்களை அறிந்து ரூ.12,110 கோடி விவசாயக் கடன் ரத்து செய்யப் பட்டுள்ளது.ஆதி திராவிட மக்களின் நலன் காக்க, நிலம் விலைக்கு வாங்கி வீடு கட்டித் தரப்படும். அடுக்குமாடி குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும். அரசுப் பள்ளியில் படித்த 435 பேர், மருத்துவக் கல்லூரி மாணவர்களாக உள்ளனர்.அவர்களின் மருத்துவப் படிப்புக்கான செலவையும் அரசே ஏற்றுள்ளது.

உடுமலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளதன் மூலமாக, கால்நடை செல்வங்களை பாதுகாக்கும் அரசாகவும் உள்ளது. குடி மராமத்துதிட்டம் மூலமாக ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவியபோது விலையில்லா அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் இலவசமாக விநியோகிக்கபட்டன.

மடத்துக்குளத்தில் ரூ.86 கோடி செலவில் குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமராவதி சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்டுவது குறித்து விரைவில்தீர்வு காணப்படும். நெசவாளர்களுக்கும், முதியோர்களுக்கும் ஏராளமான நலத்திட்ட உதவிகள்அளிக்கப்பட்டுள்ளன. மடத்துக்குளம் பகுதியில் 10,000 நெசவாளர்களுக்கு பசுமை வீடு கட்டித் தரப்படும்" என்றார்.

உடுமலையில் அதிமுக சார்பில்நேற்று இரவு நடைபெற்ற இளைஞர், இளம்பெண்பாசறை, தொழில்நுட்ப ‌அணியினருடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, "தமிழகத்தில் இதுவரை 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற திமுக தலைவர்ஸ்டாலின் எண்ணம் தவிடுபொடியானது. நடக்காத ஒன்றை எதிரிகள் திரித்து பரப்புவதை சமயோசிதமாக எதிர்கொள்ளுங்கள்.

திமுகவை போல அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது வீட்டு மக்களையே பார்த்துக் கொண்டிருந்ததால், நாட்டு நடப்பு குறித்து ஸ்டாலினுக்கு தெரியவில்லை. மக்களை திமுக மறந்ததால், மக்கள் திமுகவை மறந்தனர்" என்றார்.

இதைத்தொடர்ந்து, உடுமலை காந்தி நகரிலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பங்களாவில் ஓய்வு எடுத்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இதே இல்லத்தில் தங்கிச் சென்றுள்ளார் என்பதும்,துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் தங்கிச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இன்று (பிப்.13) காலை உடுமலைமத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பேச உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x