மாநில அளவில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது: போட்டியில் நல்லகானகொத்தப்பள்ளி அரசுப் பள்ளி மாணவரின் வடிவமைப்புக்கு முதலிடம்

மாநில அளவில் நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதில் முதலிடம் பிடித்த, கிருஷ்ணகிரி நல்ல கானகொத்தப்பள்ளி அரசுப்பள்ளி மாணவர் தனுஷ்குமாரை, சிஇஓ பாலமுரளி பாராட்டினார். அருகில் அறிவியல் ஆசிரியர் சுபாஷினி.
மாநில அளவில் நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதில் முதலிடம் பிடித்த, கிருஷ்ணகிரி நல்ல கானகொத்தப்பள்ளி அரசுப்பள்ளி மாணவர் தனுஷ்குமாரை, சிஇஓ பாலமுரளி பாராட்டினார். அருகில் அறிவியல் ஆசிரியர் சுபாஷினி.
Updated on
1 min read

மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் போட்டியில், நல்லகானகொத்தப்பள்ளி மாணவர் வடிவமைத்த, எளிய காகித விதை நடவு இயந்திரம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான, புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு இணைய வழியில் மாநில அளவிலான தேர்வு நடைபெற்றது. இதில், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய புத்தாக்க மையத்தின் அறிவியலறிஞர்களும், கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களது காட்சிப் பொருட்களை, அவர்கள் அனுப்பியிருந்த காணொலிக் காட்சி, ஒளிப்படங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து தேர்வு செய்தனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற 20 மாணவ, மாணவிகள், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில அளவிலான போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் நல்லகான கொத்தப்பள்ளியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவர் தனுஷ்குமார் வடிவமைத்த, எளிய காகித விதை நடவு இயந்திரம் முதலிடத்தில் தேர்வானது. இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர் தனுஷ்குமார், அவரது படைப்புக்கு உதவிய அறிவியல் ஆசிரியர் சுபாஷினி ஆகியோரை, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பாராட்டினார்.

இதுதொடர்பாக அறிவியல் ஆசிரியர் சுபாஷினி கூறும்போது, ‘‘ஆட்கள் பற்றாக்குறையைப் போக்க காகித விதை நடவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் குறைந்த செலவில் அதிக அளவு விதைகளை நடவு செய்யலாம். இதன் மூலம் நடப்படும் விதைகள் 100 சதவீதம் முளைப்பு திறன் கொண்டவை.

குறைவான செலவில் அதிக மகசூல் பெற முடியும். மேலும், தேசிய அளவில் டெல்லியில் நடைபெறும் இன்ஸ்பயர் கண்காட்சியில் இந்த படைப்பு பங்கேற்க உள்ளது,’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in