

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் பெட்டிகளில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால், பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா ஊடரங்கு தளர்வுக்குப் பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழக்கம்போல 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அலுவலக நேரங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய நேரக் கட்டுப்பாடு நீடிக்கிறது. மற்ற நேரங்களில் மக்கள் வழக்கம்போல பயணம் செய்து வருகின்றனர்.
ஆனால், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களில் பெட்டிகள் மிகவும் அசுத்தமாக உள்ளன. விளம்பர சுவரொட்டிகள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன. ரயில்களில் பழங்கள், நொறுக்குத் தீனி, குடிநீர் பாக்கெட் என பலவிதமான பொருட்களை வாங்குபவர்கள் தோல், காகிதம் போன்ற குப்பைகளை ரயில் பெட்டியிலேயே வீசுகின்றனர்.
ரயில் நிலையங்களில் விற்கப்படும் காபி, டீ, பிஸ்கெட், சாக்லேட் போன்றவற்றை வாங்குவோரும் காலி டீ கப், தின்பண்ட காலி கவர்களை ரயில் பெட்டியிலேயே போடுகின்றனர். இந்த குப்பைகள்அகற்றப்படாததால், ரயில் பெட்டிகள் சுகாதாரமின்றி காணப்படுகின்றன.
இதுகுறித்து ரயில் பயணிகள் சிலர் கூறியதாவது: கரோனா பரவலுக்கு முன்பெல்லாம் மின்சார ரயில்கள் மிகவும் தூய்மையாக இருக்கும். ரயில் நிலையங்களிலும் தூய்மைப் பணிகள் தினமும் நடைபெறும். ஆனால், தற்போது முக்கியமான ரயில் நிலையங்கள் தவிர, மற்ற சிறிய ரயில் நிலையங்களை கண்டுகொள்வதில்லை.
ரயில்களில் இருக்கைகளுக்கு கீழ் பழைய காகிதம், நொறுக்குத் தீனி குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்களை முழு தூய்மையுடன் பராமரிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையை மீறி ரயில் பெட்டிகளில் சுவரொட்டி ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.