

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் நாள் விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொள்கிறார்.
இது தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இந்த ஆண்டு 2 கட்டங்களாக பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. 7-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் முதல் கட்ட பட்டமளிப்பு விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இதில், பிடெக், பிஆர்க் மற்றும் பிஎச்.டி. பட்டதாரிகள் பட்டம் பெறுகிறார்கள்.
மறுநாளன்று (8-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க கடற்படையின் முன்னாள் துணை அட்மிரல் ஆன் எலிசபெத் ராண்டோ சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இந்த விழாவில், மருத்துவம், உடல்நல அறிவியல், கலை அறிவியல், மேலாண்மையியல் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் பட்டம் பெறுவார்கள். இந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுனில்காந்த் முஞ்சாலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் (டி.லிட்.) வழங்கப்படுகிறது.
இரு நாட்கள் நடைபெறும் பட்ட மளிப்பு விழாக்களில் மொத்தம் 11 ஆயிரம் மாணவ-மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் 60 பேர் பிஎச்டி பட்டதாரிகள். பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 235 மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு பாரிவேந்தர் கூறினார்.
பேட்டியின்போது பதிவாளர் என்.சேதுராமன் உடனிருந்தார்.