

திமுக ஆட்சிக்கு வந்ததும் தோல் வர்த்தகர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
திண்டுக்கல் அருகே சீலப்பாடி கிராமத்தில் திமுக கொடியை அவர் நேற்று ஏற்றி வைத்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து பேகம்பூரில் தோல் வர்த்தகர்கள், தொழிலா ளர்களுடன் கலந்துரையாடினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் தோல் வர்த்தகர்கள் கோரிக்கை நிறை வேற்றப்படும் என உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, வேலுச்சாமி எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து திண்டுக்கல் மணிக்கூண்டில் உதயநிதி பேசியதாவது: பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல், டீசல், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்துக்குத் தர வேண்டிய ரூ.15,000 கோடி ஜிஎஸ்டி நிலுவையைத் தர மறுக்கிறது மத்திய அரசு. கேட்டால் நிதி நெருக்கடி என்கிறார்கள். ஆனால் சொகுசு விமானம் வாங்குகிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே, அதிமுக ஆட்சியை கேவலமான ஆட்சி எனப் பேசுகிறார். பொங்கல் பரிசு ரூ.2,500 டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கு வந்துவிடும் என மக்களை கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துகள் முடக்கப்படும்நிலையில் ஏ-1 குற்றவாளியான ஜெயலலிதா சொத்துகள் மட்டும் ஏன் முடக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.