

மதுரை சித்திரைத் திருவிழாவின்போது தேர்தல் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் தேர்தல் தேதியை முடிவு செய்ய வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் கூறியது:
இம்மாதம் இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழா தென் மாவட்டங்களுக்கு மிக முக்கியமானது. ஏப்ரல் 24-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்ரல் 27-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள்.
கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக சித்திரைத் திருவிழா தடைபெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்படும் மதுரை சித்திரைத் திருவிழாவை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாடக் காத்திருக்கின்றனர்.
மக்கள் பெருமளவில் கூடும் சித்திரைத் திருவிழா நடக்கும் காலத்தில் தேர்தல் நடந்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படும். மக்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும்போது வாக்குப்பதிவு குறையும் ஆபத்தும் உள்ளது.
கடந்த தேர்தலில் இது நடந்தது. திருவிழாவுக்கு முன்பு அல்லது திருவிழாவுக்கு பின்பு தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்றார்.