Published : 11 Feb 2021 07:51 PM
Last Updated : 11 Feb 2021 07:51 PM

நுரையீரல் புற்றுநோய்க்கு டியூப்லெஸ் வாட்ஸ் அறுவை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை அறிமுகம் 

சென்னை

அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையம், இந்தியாவில் முதல் முறையாக நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க குழாய் இல்லாத வீடியோ உதவியுடனான தோராக்கோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை (வாட்ஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ புற்றுநோய் மையத்தின் மருத்துவ வல்லுநர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த 15 வயது நோயாளிக்கு டியூப்லெஸ் வீடியோ அசிஸ்டெட் தோராக்கோஸ்கோபிக் (Tubeless Video Assisted Thoracoscopic Surgery – VATS - வாட்ஸ்) என்ற புதிய சிகிச்சைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர். இந்தக் குறைந்தபட்சத் துளையிடல் - ஊடுருவல் சிகிச்சை முறை இந்தியாவில் முதல் முறையாகச் செய்யப்படுகிறது.

வங்கதேசத்தைச் சேர்ந்த நஹித் ஹசன், இடது தொடை எலும்பில் (இடது தொடை எலும்பு) எவிங்கின் சர்கோமா நோயால் பாதிக்கப்பட்டார். இது அக்டோபர் 2019-ல் கண்டறியப்பட்டது. இது மிகவும் அரிதான புற்றுநோய்க் கட்டியாகும். இது எலும்புகளில் வளரும் அல்லது எலும்புகளைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்கள், குருத்தெலும்பு அல்லது நரம்புகள் போன்றவற்றில் வளரும். இது பொதுவாக 10 முதல் 20 வயதுடையவர்களை அதிகம் பாதிக்கிறது. நஹித் வங்கதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவரது இந்தக் கட்டிக்கு பல கீமோதெரபி சிகிச்சைகளைப் பெற்றார். பிப்ரவரி 2020-ல் அவருக்கு அதே இடது கீழ் மூட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கு நிலையான சிகிச்சை அளிக்கப்பட்டது.

நோயாளிக்கு, பொது முடக்கக் காலத்தில் படிப்படியாக இடது நுரையீரலின் மேல் பகுதியில் மெட்டாஸ்டாடிக் கட்டிகள் (புற்றுநோய்க் கட்டிகள்) உருவாகின. நுரையீரலில் ஏற்படும் மெட்டாஸ்டேடிக் கட்டிகள் மனித உடலின் மற்ற பகுதிகளில் உருவாகி, ரத்த ஓட்டம் வழியாக நுரையீரலுக்குப் பரவும் வீரியம் கொண்ட ஒரு புற்றுநோய் வகை ஆகும். மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், சர்கோமா, சிறுநீர்ப்பை புற்றுநோய் மற்றும் நியூரோபிளாஸ்டோமா ஆகியவை நுரையீரலில் பரவும் பொதுவான கட்டிகள்.

2020 டிசம்பரில், நஹித் கூடுதல் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக சென்னை அப்பல்லோ புற்றுநோய் மையத்திற்கு அழைத்து வரப்பட்டார். புற்றுநோய் அவரது இடது நுரையீரலின் மேல் பகுதியில் பல இடங்களுக்குப் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. நோயாளியின் முந்தைய உடல்நல சிக்கல்களைக் கருத்தில் கொண்டு குழாய் இல்லாத வாட்ஸ் சிகிச்சை நடைமுறைக்கு உட்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது. அவரது உடல் பகுதியில் (body cavity) எந்தக் குழாயையும் செருகாமல் அவரது நுரையீரல் மெட்டாஸ்டாஸிஸ் முடிச்சுகளை அகற்ற குறைந்தபட்ச ஊடுருவல் - துளையிடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தச் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு அடுத்த நாள் நோயாளி சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்தச் சிகிச்சை முறை குறித்து அப்பல்லோ புற்றுநோய் மையத்தின் தொராசிக் புற்றுநோயியல் நிபுணர் மற்றும் ஆலோசகர் டாக்டர் அபிஜித் தாஸ் (Abhijith Das, Consultant Thoracic Oncologist, Apollo Cancer Centre) கூறுகையில், "டியூப்லெஸ் வாட்ஸ் நுட்பம் வழக்கமான நடைமுறைகளை விட பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது மிகக் குறைவான ஊடுருவல் சிகிச்சை முறை ஆகும். அதாவது குறைவான வலி, குறைந்த ரத்த இழப்பு மற்றும் விரைவான குணம் அடைதல் ஆகிய நன்மைகள் இதில் உண்டு. இந்த சிகிச்சைத் தொழில்நுட்பம் நோயாளியின் நோய் எதிர்ப்பு நிலை மீதான குறைந்தபட்ச விளைவையும் குறைக்கிறது. இது நேரடி அறுவை சிகிச்சையை விட ஒரு உறுதியான முன்னேற்றமாகும். இந்த நடைமுறையில் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நோய்த்தொற்றுகள் மற்றும் சிக்கல்களுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. குழாய் பயன்படுத்துதலின்போது ஏற்படக் கூடிய மார்பு வடிகால் மற்றும் சிறுநீர் வடிகுழாய் நீக்கம் (chest drainage and urinary catheterization) ஆகிய சிக்கல்களையும் குழாய் இல்லாத வாட்ஸ் சிகிச்சை மூலம் தவிர்க்கலாம்” என்றார்.

அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி (Preetha Reddy, Vice Chairperson Apollo Hospitals Group)கூறுகையில், “உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, 2020-ம் ஆண்டில் மட்டும், 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. மொத்தம் 8.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால சுகாதாரச் சேவையை மேம்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்பம் மற்றும் முன்முயற்சிகளுடன் அப்பல்லோ செயல்படுகிறது. இந்தியாவில் புற்றுநோய்க்கு எதிரான போரில் அப்பல்லோ மருத்துவமனைகள் முன்னணியில் உள்ளன. கோவிட் – 19 காலங்களில் பல்வேறு அத்தியாவசிய நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு அத்துடன் சேர்த்து புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. வளாகத்தை உரிய சுகாதார நெறிமுறைகளுடன் பாதுகாப்பாக வைத்திருக்க அப்பல்லோ புற்றுநோய் மையங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x