

அதிமுக ஆட்சியில், பொங்கல் பண்டிக்கைக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 கொடுத்தோம். திமுக ஆட்சியிலும் தான் பொங்கல் பண்டிகை வந்தது. ஆனால், ஒரு கருப்பட்டி துண்டாவது கொடுத்தார்களா? என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகமார் ‘கிண்டல்’ செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் புதிய தாலுகா அலுவலகக் கட்டிட பூமி பூஜை நடந்தது. வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விவசாய குடும்பத்தில் முதல்வர் கே.பழனிசாமி பிறந்ததால் விவசாயிகளுடைய நிலை அவருக்கு தெரிந்தது. அதனால், பயிர்க்கடன் தள்ளுவபடி செய்துள்ளார்.
அதுபோல், விவசாயம் சார்ந்த தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதற்காகத்தான் பொங்கல் பண்டிகைக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 கொடுத்தார்.
தமிழ், தமிழர்கள் என்று புராணம் பாடும் திமுக ஆட்சியிலும் பொங்கல் பண்டிகை வந்தது. அவர்கள் ஒரு கருப்பட்டி துண்டாவது கொடுத்தார்களா?.
விவசாயமும், விவசாயிகளும் செழிப்புடன் இருக்க மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.
அதிமுகவில்தான் எளிமையான மக்கள் பிரதிநிதிகளைப் பார்க்க முடியும். அரசையும் அவர்களையும் மக்கள் எளிதாக அனுகலாம். முதல்வர் கே.பழனிசாமி தினம், தினம் புது திட்டங்களை அறிவிக்கிறார்.
அவற்றை அறிப்போடு நின்றுவிடாமல் நேரடியாக அந்த ஊர்களுக்கே சென்று திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துகிறார்" என்றார்.