

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் கனிமவளத்துறை சார்பில் சோதனைச் சாவடிகள், எடை நிலையங்கள் அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த சதீஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
குமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது. கேரளாவில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு எம் சாண்ட் மணலையும் குறிப்பிட்ட அளவு தான் உற்பத்தி செய்ய முடியும். இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் எம்.சாண்ட் மணல் கொண்டுச் செல்லப்படுகிறது.
பொடி செய்யப்படாத கற்கள், ஜல்லிகளை கேரளாவுக்கு கொண்டுச் சென்று எம் சாண்டாக மாற்றி விற்கின்றனர். இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சிதைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, தமிழகத்தில் எந்தப்பகுதியிலிருந்தும் பெரும் கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றை தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் கேரளாவிற்கு விற்பனைக்காக கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் கனிம வளத்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.
சட்டவிரோதமாகக் கனிமவளங்கள் திருடப்படுவதைத் தடுக்க கனிமங்களின் அளவை கணக்கிட எடை நிலையங்களும் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.