வருங்காலங்களில் சார்பு ஆய்வாளர் நியமனத்தில் தமிழ் வழி இடஒதுக்கீடு சலுகை பின்பற்றப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி

வருங்காலங்களில் சார்பு ஆய்வாளர் நியமனத்தில் தமிழ் வழி இடஒதுக்கீடு சலுகை பின்பற்றப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி
Updated on
1 min read

வருங்காலங்களில் சார்பு ஆய்வாளர் பணி நியமனத்தில் ஒவ்வொரு நிலையிலும் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை பின்பற்றப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2019 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வில் 70-க்கு 51 மதிப்பெண் பெற்றேன். உடல்திறன் தேர்வில் 15-க்கு 12 மதிப்பெண் பெற்றேன்.

டிச. 1-ல் பொதுப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு பணியிடத்துக்கு இருவர் வீதம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை.

நான் சார்ந்த எம்பிசி பிரிவுக்கு கட்ஆப் மதிப்பெண் 64. நான் 63 மதிப்பெண் பெற்றேன். எனக்கு தமிழ் வழிக்கல்வி சலுகை வழங்கியிருந்தால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருப்பேன்.

எனவே, சார்பு ஆய்வாளர் தேர்வில் ஒவ்வொரு நிலையிலும் தமிழ் வழிக்கல்வி சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதன்படி எனக்கு தமிழ் வழிக்கல்வி சலுகை வழங்கி நேர்முகத் தேர்வுக்கு அழைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை உத்தேச தேர்வு பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது போது, சார்பு ஆய்வாளர் பணி நியமனத்துக்கான உத்தேச தேர்வு பட்டியலுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தலைமை அரசு வழக்கறிஞர் விஜய்நாராயணன் வாதிடுகையில், சார்பு ஆய்வாளர் பணிக்கான நேர்காணல் தேர்வு, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய பணித் தேர்வுகளில் ஒவ்வொரு நிலையிலும் தமிழ் வழியில் கல்வி படித்தோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு சலுகை வழங்கப்படுகிறது. இதேபோல் வருங்காலத்தில் சார்பு ஆய்வாளர் பணித் தேர்விலும் ஒவ்வொரு நிலையிலும் தமிழ் வழிக்கல்வி படித்தோருக்கான இடஒதுக்கீட்டு சலுகை பின்பற்றப்படும் என்றார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் தமிழ் வழியில் கல்வி படித்தோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால், மனுதாரரையும் சார்பு ஆய்வாளர் பணிக்கு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in