Last Updated : 21 Nov, 2015 04:46 PM

 

Published : 21 Nov 2015 04:46 PM
Last Updated : 21 Nov 2015 04:46 PM

பிழைப்பில் மண் அள்ளி போட்ட தொடர் மழை: வீதிகளில் கழிவு காகிதங்களை சேகரித்து பிழைப்பு நடத்தும் முதியவரின் சோகம்

பிழைப்பில் மண் அள்ளிப்போட்டு விட்டது மழை என்று தற்போது பெய்துவரும் மழையை சபிக்கிறார் சத்தியா என்ற 60 வயது முதியவர். வீதிகளில், சாலையோரங்களில் கழிவு காகிதங்களை பொறுக்கி அதை காசாக்க முடியாததால் இவ்வாறு அவர் சபிக்க நேர்ந்திருக்கிறது.

தற்போதைய மழையால் விளைநிலங்கள் பாதிப்பு, உப்பு உற்பத்தி சரிவு, செங்கல்தொழில் முடக்கம் என்றெல்லாம் பல்வேறு தொழில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இங்கெல்லாம் தொழிலாளர்கள் பணிசெய்ய முடியாமலும் ஊதியம் கிடைக்காமலும் இருக்கின்றன. ஆனால் நடைபாதைகளிலும், வீதிகளிலும், சாலையோரங்களிலும் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துவோரின் நிலைமை மிகவும் மோசம். சிறுவியாபாரம் மூலம் கிடைக்கும் தொகையில்தான் இவர்களது அன்றாட செலவுகள் கழிகின்றன். தங்கள் பிழைப்பில் மண் அள்ளிப்போட்டுவிட்டது மழை என்று தற்போது இவர்கள் மழையை சபிக்கிறார்கள்.

திருநெல்வேலியில் டவுனில் பிரசித்திபெற்ற வடக்கு ரதவீதியில் இத்தகைய வீதியோர கடைகள் அதிகம் காணமுடியும். நாள்தோறும் மாலை நேரங்களில் இந்த கடைகளில் தங்களுக்கு முடிந்த அளவு தொகை கொடுக்கு வாங்க மக்கள் கூடுவார்கள். பண்டிகை காலங்களில் இந்த வீதியில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு ஒப்பாக கூட்டம் அலைமோதும்.

இதுபோல் திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி என்று பல்வேறு இடங்களிலும் வீதியோரம், சாலையோரங்களில் வெள்ளரி, இளநீர், காய்கனிகள், பூக்கள், துணிமணிகள், பாத்திர பண்டங்கள், வீட்டு உபயோகப்பொருட்களை விற்போர் அதிகம். மொத்த கொள்முதல் கடைகளில் இருந்தும், சந்தைகளில் இருந்தும் பொருட்களை வாங்கிவந்து சில்லறை விலைக்கு இவற்றை இவர்கள் விற்பனை செய்கிறார்கள்.

நடைபாதை ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி இவர்கள் கடைகளை நடத்துவதற்கு பல்வேறு வகைகளில் எதிர்ப்புகளும் இருக்கின்றன. அதைவிட மேலாக இயற்கை ஒத்துழைத்தால்தான் இவர்களால் வியாபாரம் செய்ய முடியும் என்ற நிலையிருக்கிறது. குறிப்பாக மழை காலத்தில் இவர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் முடங்க நேரிடுகிறது. அந்த வகையில் தற்போது திருநெல்வேலியில் மாலை, இரவு நேரங்களில் கொட்டும் மழையால் இந்த வீதியோர வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மழை காலங்களில் எல்லாம் நிகழ்வதுதான்.

ஆனால் மழையால் மறைமுகமாக இன்னும் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தெருத்தெருவாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், அட்டைகளை தினமும் சேகரித்து அவற்றை ஆக்கர் கடைகளில் எடைக்கு விற்று காசு பெறுவோரும் இதில் அடங்குவார்கள். அந்த வகையில் பாதிக்கப்பட்டிருப்பவர் சத்தியா (60).

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த இந்த ஆதரவற்ற முதியவர் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையிலுள்ள குப்பைத் தொட்டிகளில் தினமும் பிளாஸ்டிக், அட்டை, காகிதங்களை சேகரித்து அவற்றை ஆக்கர் கடைகளுக்கு கொண்டு சென்று பிழைப்பு நடத்துகிறார். சமீபத்தில் பெய்துவரும் மழையால் அவரால் இந்த கழிவு பொருட்களை சேகரிக்க முடியவில்லை. குறிப்பாக அட்டைகள், காதிகள் அனைத்தும் கொட்டும் மழையில் தொப்பலாக நனைந்துவிடுவதால் அவற்றை சேகரித்து காசாக்க முடியவில்லை.

திருநெல்வேலி டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் சாப்டர் மேல்நிலைப்பள்ளிமுன் நடைபாதையில் தான் சேகரித்த நனைந்த அட்டை பெட்டி காகிதங்களை மிதமான வெயிலில் நேற்று நண்பகலில் உலர வைத்திருந்தார்.

அவரிடம் பேசியபோது, காய்ந் திருந்தால்தான் ஆக்கர் கடையில் இவற்றை வாங்குவார்கள். கிலோவுக்கு ரூ.7 கிடைக்கும். இதுபோல் பிளாஸ்டிக் கழிவு பொருட்களுக்கு கிலோவுக்கு ரூ.10-ம், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு கிலோவுக்கு ரூ.15-ம் தருவார்கள். நாள்தோறும் சாலையோர குப்பை தொட்டிகளிலும் வீதிகளிலும் இதுபோன்றவற்றை சேகரித்துத்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பிழைப்பு நடத்துகிறேன்.

எனக்கு காசநோய், இருமல் தொற்றநோய் இருக்கிறது. இளமையில் மும்பையில் பல்வேறு கடைகளிலும் கூலிவேலை செய்து சம்பாதித்தேன். திருமணம் ஆகவில்லை. ஆதரவுக்கும் யாருமில்லை. இப்போது கூலிவேலை செய்வதற்கு உடலில் தெம்பு இல்லை. எனவே இவ்வாறு வீசியெறியும் கழிவு காகிதங்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் சேகரித்து பிழைப்பு நடத்துகிறேன். தற்போது பெய்துவரும் மழையால் கழிவு காகிதங்களும், அட்டைகளும் நனைந்துவிடுகின்றன. இதனால் அவற்றை சேகரிக்க முடியவில்லை என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x