Published : 11 Feb 2021 05:09 PM
Last Updated : 11 Feb 2021 05:09 PM

சித்திரைத் திருவிழா தேதியை இன்னும் ஏன் அறிவிக்கவில்லை?- திருவிழா நேரத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வந்தால் வாக்குப்பதிவு குறையும்

மதுரை

சித்திரைத்திருவிழா தேதியை இன்னும் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிக்காமல் இருப்பதால் திருவிழா நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் தென் மாவட்டங்களில் கடந்த மக்களவைத் தேர்தலைப் போல் வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளது.

திருவிழாக்களின் நகரான மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அழகர்கோயில் சார்பில் நடக்கும் இந்த திருவிழாவில் இறுதியாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் திரள்வார்கள்.

இந்தத் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் அரசு மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கும்.

இந்த சித்திரைத்திருவிழா கொண்டாட்டங்கள், நேரத்தில் தேர்தல் வராது. அப்படியே வரும் வாய்ப்பு இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே திருவிழா நாட்கள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய தேர்தல் ஆணையத்திற்கும் அறிக்கை அனுப்பி வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகம் முன்கூட்டிய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்காதால் கடந்த மக்களவைத் தேர்தல் மதுரையில் சித்திரைத் திருவிழா நாளில் ஏப்ரல்18ம் தேதி நடந்தது.

அதற்கு முந்தைய நாள் ஏப்ரல் 17ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், தேர்தல் நாளான 18ஆம் தேதி தேரோட்டமும் மறுநாள் 19ஆம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவமும் நடைபெற்றது.

அதனால், மக்கள் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய பெரிய ஆர்வம் காட்டாமல் சித்திரைத் திருவிழா கொண்டாடத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தனர்.

தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு பாதிக்காமல் இருக்க மதுரை மக்களவைக்கு இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடத்தியநிலையிலும் 65.83 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

இது அதற்கு முந்தைய தேர்தலைவிட சுமார் 2 சதவீதம் குறைவு. அதனால் அதிருப்தியடைந்த அரசியல் கட்சிகள், ‘‘2 சதவீதம் என்றாலும் 30 ஆயிரம் வாக்குகள் ஆகிவிடுகிறது.

மேலும் கூடுதல் பாதுகாப்பு, பணியாளர்கள், சிறப்பு ஏற்பாடுகளுக்கு 40 சதவீதம் கூடுதல் தேர்தல் செலவாகியுள்ளது. மற்ற தொகுதிகளில் 70 சதவீதத்தை கடந்துள்ள நிலையில், மதுரையில் மேலும் 5 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகியிருக்க வேண்டும்’’ என்று குற்றம்சாட்டினர்.

இது அப்போதைய மாவட்ட ஆட்சியருக்கே பெரும் நெருக்கடியும், சிக்கலையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று சென்னையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மதுரை சித்திரைத்திருவிழாவும் ஏப்ரல் மாதத்தில் வர இருக்கிறது. ஆனால், அதற்கான தேதிகளை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அதனால், கடந்த மக்களவைத் தேர்தலில் கோட்டைவிட்டதுபோல் இந்த சட்டமன்ற தேர்தலிலும் ஒரே நேரத்திலும், சித்திரைத்திருவிழாவும், தேர்தல் திருவிழாவும் நடக்காமல் இருக்க முன்கூட்டிய சித்திரைத் திருவிழா விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தகவல் அனுப்பியிருக்கிறோம்

இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரையிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் திருவிழா தேதிகளை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்தும் தகவல் கேட்டிருந்தார்கள்.

நாங்கள், தோராயமாக திருவிழா நடக்கும் நாட்களை குறிப்பிட்டு அந்த நாட்களில் எவ்வளவு மக்கள் மதுரையில் கூடுவார்கள் போன்ற புள்ளி விவரங்களை அளித்து இருக்கிறோம். அது தேர்தல் ஆணையம் கவனத்திற்கும் சென்றிருக்கும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x