Published : 11 Feb 2021 04:07 PM
Last Updated : 11 Feb 2021 04:07 PM

ராமேசுவரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அக்னித் தீர்த்தக் கடலில் குவிந்த மக்கள்

தை அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் ராமேசுவரம் அக்னித் தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.

சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசையன்று முன்னோர்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் எனக் கருதப்படுகிறது. முன்னோர்களுக்கு அமாவாசை தினதன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு உணவும் நீரும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஐதீகத்தைப் பூர்த்தி செய்ய இந்துக்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாலய அமாவாசை தினங்களில் தர்ப்பணம் செய்வர்.

தை அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை இரவில் இருந்தே தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மற்றும் கர்நாடகாவிலும் இருந்து யாத்ரீகர்கள் ராமேசுவரம் வரத் தொடங்கினர்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலின் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

காலை 7 மணியளவில் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு அருள்மிகு ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தின அம்பாள் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர்.

பின்னர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கப்பட்டதையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து, பின்னர் அக்னி தீர்த்த கடலிலும், அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர்.

அக்னி தீர்த்தக்கடலில் தீர்த்தமாடிய பின்னர் ஈரத் துணிகளை மாற்றுவதற்கு பெண்களுக்கு இடவசதி, கழிவறை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை.

மேலும் தீர்த்தமாடிய பின்னர் ஈரத் துணிகளை மாற்றுவதற்கு மறைவிடங்களை தேடி பெண்கள் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருந்தது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்குள் வருவதற்கு போதுமான வசதிகள் செய்து தரவில்லை , என பக்தர்கள் குறை கூறினார்கள்.

சேதுக்கரை கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்:

இது போல ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை, தேவிப்பட்டிணம் மற்றும் வைகை நதி நீர்நிலைகளிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர்.

திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாத பெருமாள்சுவாமி கோயிலில் தை அமாவாசை தினத்தில் வழங்கப்படும் பாயாசத்தை குடித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் சேதுக்கரையில் புனித நீராடிவிட்டு பாயாச பிரசாதத்தைப் பெருவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x