

திண்டிவனத்தில் அரசு ஒப்பந்ததாரர் குமார் என்பவர் வீடு மற்றும் அலுவலகங்களில் சரக்கு மற்றும் சேவை வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி.கே.குமார், அரசு ஒப்பந்ததாரர். விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித் துறை மூலமாக பல்வேறு சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார்.
மேலும், இவர் திண்டிவனம் அருகே எம்.சான்ட் மணல் குவாரியும் பெரிய அளவில் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், இன்று (பிப். 11) காலை சரக்கு மற்றும் சேவை வரி துறையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர், திண்டிவனத்தில் உள்ள அவருடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அவர் ஜிஎஸ்டியை முறையாக செலுத்துகிறாரா என சோதனை செய்யப்பட்டதில், அவர் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முழுமையாக செலுத்தியுள்ளதாகவும், சோதனை நிறைவுபெற்றதாகவும் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.