Published : 11 Feb 2021 01:18 PM
Last Updated : 11 Feb 2021 01:18 PM

தேர்தல் தொடர்பாக கமல்ஹாசனுக்கு முடிவெடுக்கும் அதிகாரம்: மக்கள் நீதி மய்ய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது, யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, இல்லத்தரசிகளுக்கு ஊதியம், மொழித்திணிப்புக்குக் கண்டனம், ஜெயலலிதா மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வருவதில் அலட்சியம் கூடாது, எழுவர் விடுதலை, தமிழக அரசு வாங்கிய கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உட்பட 25 தீர்மானங்கள், மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அந்தக் கட்சியின் முதல் பொதுக்குழு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் இன்று (பிப். 11) நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி, தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

"1. ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க வேண்டும் எனும் லட்சியத்திற்காக அயராது பாடுபட்டு வரும் கமல்ஹாசன் உடலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சார்பாகவும் தொண்டர்கள் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

2. கட்சியின் சின்னமான 'பேட்டரி டார்ச்' சின்னத்தைப் போராடி மீட்ட தலைவருக்கும் அவரது வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்பட்டு சின்னத்தை மீட்ட நிர்வாகிகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

3. தமிழ் மண்ணுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டுமென்பதற்காக தன் திறமை, தொழில், செல்வம், புகழ், அனுபவம் அனைத்தையும் பயன்படுத்தி இரவு பகல் பாராது உழைக்கும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராக செயல்பட வேண்டும் என அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாகவும் வைக்கப்பட்ட கோரிக்கையை தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி, கமல்ஹாசன் இன்று முதல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராகச் செயல்படுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

4. கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்குரிய அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுகிறது. தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, தனித்துக் களம் காண்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுகிறது.

5. 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு உழைத்து மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களைப் பெருவெற்றி பெறச் செய்து தலைவர் கமல்ஹாசனை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். 'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் நமது கனவினை நனவாக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.

6. கரோனா பெருந்தொற்று நோயால் உலகமே அடைந்து கிடந்தபோது தங்கள் உயிரையும் பாதுகாப்பையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி மக்களைக் காத்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், காவல்துறை உள்ளிட்ட அரசுப்பணியாளர்கள், அமைச்சர்கள், அரசியலாளர்கள், தன்னார்வலர்கள், வணிகர்கள் என அனைவரது சேவையையும் மக்கள் நீதி மய்யம் நெஞ்சாரப் பாராட்டுகிறது. நன்றி தெரிவித்துக்கொள்கிறது. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் துன்பம் தீர்க்க முதலில் களமிறங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம். 'நாமே தீர்வு' என நாம் ஆற்றிய பணிகள் வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். பெருந்தொற்று கால நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம். இந்தச் சேவையில் நமது கட்சியின் உறுப்பினர்கள் சிலரையும் இழந்திருக்கிறோம். அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

7. நாற்புறமும் பகைசூழ்ந்து நிற்க, குளிர் மழை வெயில் பாராது, அல்லும் பகலும் தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் மகத்தான தியாகத்தையும் சேவையையும் வீரத்தையும் மக்கள் நீதி மய்யம் போற்றுகிறது. ஈடு இணையற்ற இந்திய ராணுவ வீரர்களின் புகழ் ஓங்குவதாகுக!

பொதுக்குழுக் கூட்டத்தில் கமல்ஹாசன்.

8. 2021 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களைப் பெருவெற்றி பெறச் செய்து 'புதியதோர் புதுவை செய்வோம்' எனும் நம் கனவினையும் நனவாக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.

9. அரசியல் மாணவர்களைத் தாக்கும் முன் மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருக்க வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்தி தமிழகத்தைச் சீரமைக்க மாணவர்கள் தாமாகவே முன் வரவேண்டும் என தமிழக மாணவர்களை அன்போடு அழைக்கிறது மக்கள் நீதி மய்யம்.

10. தமிழகத்தின் நலனுக்காகப் பாடுபடும் எண்ணற்ற தன்னார்வல தொண்டு நிறுவனங்கள், அறம்சார் அமைப்புகள், சுற்றுச்சூழல் இயக்கங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இவர்களது சேவையும், தியாகமும் போற்றுதலுக்குரியவை. மக்கள் நீதி மய்யம் இத்தகைய மக்கள் சேவகர்களின் மகத்தான பணியை மதிக்கிறது. உளமாறப் பாராட்டுகிறது. மண்ணையும், மொழியையும், மக்களையும் காக்க இவர்கள் ஓரணியில் திரளவேண்டுமென கேட்டுக்கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.

11. கிராம சபைகளின் முக்கியத்துவத்தையும் பலத்தையும் தமிழகம் முழுக்க உணரச் செய்த பெருமை மக்கள் நீதி மய்யத்தையே சாரும். கிராம சபைகளை நடத்தினால் தங்களது ஊழல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் அம்பலப்பட்டு விடும் எனும் பயத்தால் கரோனாவைக் காரணம் காட்டி கிராம சபைகளை நடத்தாமல் இருக்கும் தமிழக அரசின் செயலை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.

12. வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சுழல் சூறையாடப்படுவதையும் விவசாயம் பாதிக்கப்படுவதையும் 'கிராமியமே தேசியம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. எட்டுவழிச் சாலை போன்ற விவசாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ் மண்ணில் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

13. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 561 யானைகள் உயிரிழந்திருப்பது இந்த அரசு சூழியல் பாதுகாப்பில் எந்தளவுக்கு அலட்சியம் காட்டுகிறதென்பதன் எளிய உதாரணம். வனவிலங்குகளின் வாழ்விடங்களையும், வழித்தடங்களையும் ஆக்கிரமித்திருப்பவர்கள் எவராக இருப்பினும், எவ்வளவு பெரிய இடத்துத் தொடர்புகள் கொண்டவராக இருப்பினும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

14. நாட்டின் பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாத அம்சம். அவர்களது நியாயமான உழைப்புக்கும் தியாகத்திற்கும் அரசு ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்பது மக்கள் நீதி மய்யத்தின் நீண்டநாள் கோரிக்கை. இப்போது அதை உச்ச நீதிமன்றமே வலியுறுத்துகிறது. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசும் மாநில அரசும் ஆவண செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

பொதுக்குழுக் கூட்டத்தில் கமல்ஹாசன்.

15. நாட்டையே அதிரச் செய்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மக்கள் நீதி மய்யமே முதலில் வெளிக்கொண்டு வந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரணாக நின்றது. இந்தக் கொடிய சம்பவம் நடந்து இரண்டாண்டுகளாகியும் விசாரணைகள் முடிந்தபாடில்லை. குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்ந்து தமிழகத்தில் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. பொள்ளாச்சி வழக்கின் விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

16. இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை எப்படியாவது திணித்து விட வேண்டும் எனும் பாஜக அரசின் முயற்சிகளை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது. மொழித்திணிப்பு எந்த வேடமிட்டு வந்தாலும் தமிழாய்ந்த தமிழர்களின் கூடாரமான மக்கள் நீதி மய்யம் முழு வீச்சுடனும் ஆற்றலுடனும் எதிர்க்கும்.

17. பட்டப் பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகள் தமிழகத்தில் பெருகிவிட்டதன் சாட்சியே ஏரலில் உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவம். சாராயம் விற்பது அரசாங்கம் செய்யவேண்டிய தொழில் அல்ல. இலக்கு நிர்ணயித்து விற்பனையைப் பெருக்கும் மக்கள் விரோத செயல் உடனே நிறுத்தப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகள் இருக்கும் ஊர்தோறும் தரமான இலவச குடிநோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் உடனே திறக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

18. தமிழகத்தில் நிகழ்ந்து வரும் படுகொலை கொள்ளைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதன் அடையாளங்கள். துப்பாக்கிக் கலாச்சாரம், கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்திருப்பது, கூலிப்படை கொலைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.

19. மறைந்த முன்னாள் முதல்வரின் மரணத்திற்கான காரணம், அதனைத் தொடர்ந்து கோடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மர்ம மரணங்களின் பின்னணி ஆகியவற்றை அறியும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. இதற்கு மேலும் அலட்சியம் காட்டாமல் உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

20. அரசு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவம் பயிலும் மாணவர்கள், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்கள் என மருத்துவத் துறை சார்ந்த எவரும் இந்த ஆட்சியில் நிம்மதியாக இல்லை. நியாயமான உரிமைகளுக்குக் கூட வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது. இவர்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.

21. நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிக்கொண்டிருக்கும்போதே இடிந்து விழுந்தது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டிய அணைக்கட்டு ஒரே மாதத்தில் உடைந்தது. கொசூரில் மினி கிளினிக் திறப்பு விழா நடந்துகொண்டிருக்கும்போதே இடிந்து விழுந்தது. மக்களின் வரிப்பணத்தை வாரிச் சுருட்ட வேண்டுமென்பதற்காக ஊழலுக்கு ஒத்துப்போகும் ஒப்பந்தக்காரர்களிடம் டெண்டர் விட்டு மக்களின் உயிரோடும் வரிப் பணத்தோடும் விளையாடும் இந்த ஊழல் அரசை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.

பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும் கமல்ஹாசன்.

22. ஒரு வாக்குக்கு ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுத்து வாக்குகளைப் பெற திராவிடக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயல். காசு கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்கள் நிச்சயம் நல்லவர்களாக இருக்க முடியாது. போட்ட பணத்தை ஒன்றுக்குப் பத்தாக எடுக்க நிச்சயம் ஊழல் செய்வார்கள். தமிழக தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு வாக்குகளுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுத்து நேர்மையான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

23. ஏழு தமிழர் விடுதலையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்காமல் ஒருவருக்கொருவர் சுழற்றி விட்டு அரசியல் செய்வது ஏமாற்றமளிக்கிறது. தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

24. தமிழக மீனவர்கள் இந்திய கடல்பகுதிகளில் நிம்மதியாக தங்களது மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத அவலநிலை நீடிக்கிறது. அவர்களது தொழிலுக்கும், உயிருக்கும், உடமைக்கும் நிரந்தரப் பாதுகாப்பை ஏற்படுத்தி தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உண்டு. அதைச் செய்யத் தவறிய மத்திய, மாநில அரசை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.

25. தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களைப் பற்றிய வெள்ளை அறிக்கையை தேர்தலுக்கு முன்னரே மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தமிழக அரசை வலியுறுத்துகிறது".

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x