

தமிழகத்தில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
தமிழகத்தில் 6,7,8-ம் வகுப்புக்களுக்கு பாடத் திட்டங்களை 50% குறித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியானது. மறுபுறம் வகுப்புகள் திறந்தால் மாணவர்கள் சிறுவயது என்பதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படும் என்கிற தகவலும் வெளியானது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் வகுப்புகள் திறக்கப்படுமா என்பது குறித்து பதிலளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று கலந்துக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இம்மாத இறுதிக்குள் அதற்கான அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசிடமிருந்து அதற்கான தகவல் வரப்பெற்றப் பின்னரே நீட் தேர்வு எவ்வாறு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.
10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும்.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டாப் (Tab) வழங்கப்படும். இன்றைய சூழ்நிலையில் 6, 7, மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்பட்ட பள்ளிகளில் 98.5 சதவிகித மாணவர்கள் வருகை தருகிறார்கள்”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.