Last Updated : 11 Feb, 2021 03:12 AM

 

Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM

சசிகலா வருகையால் கூட்டணியில் மாற்றமா?

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகளில் மாற்றங்களை கொண்டு வந்து ஒரு மாதத்துக்குள் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் சசிகலா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வழியில் திருப்பத்தூர் நெக்குத்தி டோல்கேட்டில் ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேசும்போது, “தீவிர அரசியலில் ஈடுபடுவேன். மக்களை விரைவில் சந்திப்பேன். பொது எதிரியை ஆட்சிக் கட்டிலில் அமரவிடாமல் வீழ்த்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். திமுகவை வீழ்த்த அதிமுகவினர் அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக இணைய வேண்டும் என்று அதிமுகவினருக்கு சூசகமாக அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், சசிகலா வருகை அதிமுகவைப் பாதிக்காது என்றும் அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் அதிமுகவில் சேர்க்கமாட்டோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கூறி வருகிறார். "சசிகலா வருகை அதிமுகவில்தான் தாக்கத்தை ஏற்படுத்தும், திமுக கூட்டணிக்கு பாதிப்பு வராது" என்று திமுக கூட்டணி தரப்பு கூறுகிறது. அடுத்த சில நாட்களில் சசிகலாவை சந்திக்கும் முக்கிய பிரமுகர்களைக் கொண்டே அவர் தனதுஅடுத்தகட்ட அரசியல் நகர்வை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தனது செல்வாக்கை வலுவாகப் பதிவு செய்தாக வேண்டிய கட்டாயத்திலும் சசிகலா இருக்கிறார். அரசியல் சதுரங்கத்தில் சசிகலா நகர்த்தும் காய்கள், கூட்டணியில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகலா வருகைக்குப் பிறகு தேர்தல் கூட்டணிக் கணக்கை தொடங்கலாம் என்று பாஜக திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டாலும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டதால், பாஜகவினரும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வர் பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தாமதிக்காமல் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், சசிகலா உடல் நலம் பெறவும், தீவிர அரசியலில் ஈடுபடவும் பெண் என்ற முறையில் தாம் விரும்புவதாகக் கூறுகிறார். ஆனால், தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி குறித்து பேசப்படும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. இருப்பினும், சசிகலா வருகையால் கூட்டணி பேச்சை அதிமுக விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றும் பணி தொடரும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் சட்டப் போராட்டம் மூலம் அதிமுகவைக் கைப்பற்றி தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் இல்லை. சட்டரீதியாக இரட்டை இலையை முடக்க சசிகலா விரும்பமாட்டார். அதேநேரத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் வரவழைத்து, அதிமுகவுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து அதிமுக இணைப்புக்கு முனைப்பு காட்டுவார். அதன்மூலம் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்பது சசிகலாவின் திடமான நம்பிக்கை. அதுவே அவரது குறிக்கோளாகவும் இருக்கிறது.

தற்போதைய சூழலில் அதிமுகவை இணைக்க முடியாவிட்டால், அமமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று, தனது செல்வாக்கை நிரூபிக்க சசிகலா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அரசியல்ரீதியாக பெற்ற வெற்றியைக் கொண்டு, சட்டப்படி அதிமுகவைக் கைப்பற்ற சசிகலா முயற்சிக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x