

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு மற்றும் வன்னியர் உள் ஒதுக்கீடு உறுதியானதும் திண்ணை பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட பாமகவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகவுள்ள நிலையில், தொகுதி பங்கீடு மற்றும் வன்னியர் உள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்கான பணிகளில் பாமகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
இந்த தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கிறது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடாக 10 சதவீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டபோதும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதும் பாமகவினர் சரியாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மிகவும் வருத்தப்பட்டார். அதனால், இந்த முறை திண்ணை பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுமாறு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதிகள் மற்றும் வன்னியர் உள் ஒதுக்கீடு உறுதியானதும் ஒவ்வொரு கிராமத்திலும் பாமகவினர் தீவிர திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.