Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து சென்னையில் முக்கிய ஆலோசனை வாக்குப்பதிவை ஒரேகட்டமாக நடத்த வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தல்

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர் பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். தேர்தலை ஒரே கட்ட மாக நடத்த வேண்டும் என்று அவரிடம் அதிமுக, திமுக உள் ளிட்ட அனைத்து அரசியல் கட்சி களும் வலியுறுத்தியுள்ளன.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் எப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துறையினர் தீவிரமாக செய்து வரு கின்றனர். தேர்தல் முன்னேற்பாடு களை ஆய்வு செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜிவ் குமார், கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஷேபாலி பி.சரண், பொதுச்செயலர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார், இயக்குநர் பங்கஜ் வத்சவா, செயலர் மலேய் மாலிக் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர்கள், நேற்று பகல் 12.15 மணிக்கு தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர் களின் கருத்துகளை கேட்டறிந் தனர். தேர்தலை எப்போது, எத் தனை கட்டமாக நடத்துவது, நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோ சனையில் அதிமுக சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன், பாஜக தேர்தல் பிரிவு தேசிய செயல் உறுப்பினர் ஓம் பதக், தமிழக துணைத் தலைவர் எம்.என்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், தேமுதிக துணைச் செய லாளர் பார்த்தசாரதி மற்றும் தேசிய வாத காங்கிரஸ், திரிண மூல் காங்கிரஸ் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தேர்தல் ஆணையர்களுடனான சந்திப்பு முடிவில் அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): வாக்குச்சாவடிகளில் நிழலுக்காக பந்தல், குடிநீர் வசதி செய்து தரவேண்டும். வாக் குச்சாவடிக்குள் இயந்திரத்தின் மேல் விளக்கு வசதி அமைக்க வேண்டும். முக்கியமாக, மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், ஏப்ரல் நான்காவது வாரத்தில் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என கூறியுள் ளோம்.

ஆர்.எஸ்.பாரதி (திமுக): திமுக சார்பில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் பதிலளிக்க, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவிட் டுள்ளார். மாதவரத்தில் 16 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான மின் னணு இயந்திரங்கள் பாது காப்பின்றி வைக்கப்பட்டுள்ளது குறித்து குறிப்பிட்டோம். அதை பார்வையிட அதிகாரிகளுக்கு தேர் தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வாக்காளர் பட்டியலை சீரமைக்க வேண்டும். அரசுப் பணத்தில் தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப் படுவதை தடுக்க வேண்டும். தேர்தலை ஒரேகட்டமாக நடத்த ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். எந்த நேரத்தில் தேர்தல் வைத் தாலும் சந்திக்க தயாரக உள்ளோம்.

கே.டி.ராகவன் (பாஜக): பாஜக சார்பில் 14 கோரிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளோம். தமி ழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். ஏப்ரல் மாதத் தில் தமிழ்ப் புத்தாண்டு வருவ தால், அதன்பின் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் பார்வையாளர் களை அதிக அளவில் நியமிக்க வேண்டும். வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அடிப்படையில் காவல்துறை பாதுகாப்பை அதிகரிப் பதுடன், பதற்றமான வாக்குச்சாவடி களில் மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என் றும் கூறியுள்ளோம்.

ஆர்.தாமோதரன் (காங்கிரஸ்): தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர் தல் நடத்த வேண்டும். பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பார்வையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் நிறுத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண் ணிக்கைக்கும் இடையில் 10 நாட்கள்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தோம்.

மு. வீரபாண்டியன் (இ.கம்யூ): தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளோம்.

டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ.): வாக்காளர்களுக்கு வாக் காளர் அடையாள அட்டையை விடுபடாமல் வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் தவறு செய்தவர் களை கைது செய்த பின் எடுத்த நடவடிக்கை, பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் மீதான நட வடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளோம்.

பார்த்தசாரதி (தேமுதிக) : தமி ழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச் சினை இல்லாமல் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் அறிக்கையில் செயல் படுத்தக்கூடிய திட்டத்தை மட்டும் வெளியிட வேண்டும் என்று ஆணை யம் உத்தரவிட கோரிக்கை விடுத் துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளு டனும், மாலை 4 மணி முதல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு வினர் ஆலோசனை நடத்தினர். 2-வது நாளான இன்று, வருமான வரி, அமலாக்கத் துறை உள் ளிட்ட பல்வேறு துறைகளின் அதி காரிகளுடனும், தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு உயரதிகாரி களுடனும் ஆலோசனை நடத்து கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x