Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம்; 2-வது முறையாக பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸும் ரத்து: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக உரிமைக்குழு 2-வது முறையாக பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, கடைகளில் தடையின்றி சரளமாக விற்கப்படுகிறது என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில், கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்களை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் எடுத்துச்சென்று காண்பித்தனர்.

இது சட்டப்பேரவையின் உரிமையை மீறிய செயல் எனக் கூறி பேரவைக் குழுவின் உரிமைக்குழு சார்பில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக விளக்கம் கோரி நோட்டீஸ் பிறப் பிக்கப்பட்டது.

இந்த நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, உரிமைக்குழு பிறப்பித்த நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் இருப்பதாகக் கூறி அந்த நோட்டீஸை ரத்து செய்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இருப்பினும் தவறுகளைக் களைந்து மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்கலாம் என உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.

அதையடுத்து சட்டப்பேரவை உரிமைக்குழு சார்பில் 2-வது முறையாக இதே காரணத்துக்காக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்தநோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பாக நடந்தது. அப்போது இந்த நோட்டீஸுக்கு நீதிபதிஇடைக்காலத் தடை விதித்திருந்தார். மேலும் விசாரணையின்போது சட்டப்பேரவைச் செயலர் மற்றும் உரிமைக்குழு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆகியோர், ‘‘சட்டப்பேரவைக்கென இருக்கும் மரபை மீறியதால்தான் திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. தற்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே 2-வது முறையாக விளக்கம் கோரிதான் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்குள் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியமில்லை’’ என வாதிட்டனர்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர்கள் ஆர்.சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமித்ஆனந்த் திவாரி உள்ளிட்டோர் தங்களது வாதத்தில், ‘‘பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக்குழுத் தலைவராக உள்ள பொள்ளாச்சி ஜெயராமனை திமுகவினர் விமர்சித்தனர். அதன் காரணமாக உள்நோக்கத்துடன் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக்குழு 2-வதுமுறையாக நோட்டீஸ் பிறப்பித்துள்ளது’’ என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, இந்த வழக்கின் தீர்ப்பைகடந்த டிசம்பர் மாதம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, குட்காவிவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக உரிமைக் குழு 2-வது முறையாக பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x