திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சசிகலா, சுதாகரன், இளவரசியின் 75.46 ஏக்கர் சொத்துகள் அரசுடமை

திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சசிகலா, சுதாகரன், இளவரசியின் 75.46 ஏக்கர் சொத்துகள் அரசுடமை

Published on

திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொந்தமான 75.46 ஏக்கர் பரப்பளவிலான சொத்துகள் தமிழகஅரசால் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை திருவாரூர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று பிறப்பித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா, அவரது உறவினர்களான சுதாகரன், இளவரசிக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ளசொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இவர்களுக்கு சொந்தமாக உள்ள 34.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலம், கட்டிடங்கள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக திருவாரூர் ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வண்டாம்பாளை பகுதியில் உள்ள 34.24 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன. இவை வண்டாம்பாளையில் செயல்பட்டு வந்த ‘ராமராஜ் பிரைவேட் அக்ரோ மில்ஸ் லிமிடெட்’ என்றபெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர்.இச்சொத்துகள் அனைத்தும் வடசென்னை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இந்த சொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன. இந்தசொத்துகள் தமிழக அரசின்சொத்துகள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்கு பாத்தியப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில்..

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொந்தமான இரு சொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, திருவள்ளூர் ஆட்சியரின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், வேளகாபுரம் கிராமத்தில் உள்ளசுதாகரன், இளவரசி ஆகியோர்பங்குதாரர்களாக உள்ள மெடோ அக்ரோ பார்ம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டுக்கு சொந்தமான, 20.33 ஏக்கர் மற்றும் 20.89 ஏக்கர் என, 41.22 ஏக்கர் பரப்பளவிலான இருசொத்துகள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தமிழ்நாடு அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சொத்துகள் வடசென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in