புதுப்பட்டினம்-உய்யாலிகுப்பம் இடையே கடல் அரிப்பை தடுக்க ரூ.17 கோடியில் தூண்டில் வளைவு: மீன்வளத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

உய்யாலிகுப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
உய்யாலிகுப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
Updated on
1 min read

புதுப்பட்டினம்-உய்யாலிகுப்பம் இடையே கடல் அரிப்பை தடுப்பதற்காக ரூ.16.80 கோடி செலவில் 450 மீட்டர் நீளத்துக்கு தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்றுஅடிக்கல் நாட்டி தொடங்கி

வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் இடையே ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடல் சீற்றத்தால் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு மீன் இறங்குதளம், வலை உலர்த்தும் கட்டிடங்கள் சேதமடைந்தன.

மேலும், கடற்கரை சேதமடைந்து மீன்பிடி படகுகளை நிறுத்த இடமில்லாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மேற்கண்ட பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுப்பட்டினம்-உய்யாலிகுப்பம் இடையே தூண்டில் வளைவு அமைக்க ரூ.16.80 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, நபார்டு வங்கி மூலம் மேற்கண்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

இதன்மூலம், கடற்கரையில் 450 மீட்டர் நீளத்துக்கு நேர்கல் தடுப்புச்சுவர் மூலம் தூண்டில் வளைவு, மீன் ஏலக்கூடம் 2, வலை பின்னும் கூடம் 2, மீன்உலர்தளம் 2, பொது கழிப்பறை ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜையுடன் நேற்று நடைபெற்றது. இதில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இப்பணிகள் அனைத்தும் 9 மாதகாலத்துக்கு நிறைவு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன்,கோட்டாட்சியர் செல்வம், மீன்வளத் துறை ஆணையர் ஜெயகாந்தன், முதன்மை செயற்பொறியாளர் ராஜூ, செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் முருகன், முன்னாள் எம்எல்ஏ தனபால், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கலியபெருமாள் மற்றும்மீனவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரியை மறந்த அமைச்சர்

உய்யாலிகுப்பத்தில் தூண்டில் வளைவு அடிக்கல் நாட்டு விழா தொடங்கும் நேரத்தில் ஆடியோ அமைப்பாளர்கள் தமிழ்த்தாய்வாழ்த்து பாடல் சிடியை தேடிக்கொண்டிருந்தனர்.

உடனே, அமைச்சர் ஜெயக்குமாரே மைக்கை பிடித்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினார். அப்போது, இடையில் பாடல் வரியை மறந்து திணறியதுடன், சிரித்தவாறே என்ன செய்வதென தெரியாமல் தவித்தார். அருகிலிருந்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பாடல் வரிகளை எடுத்துகொடுத்தார். ஆனாலும், அந்த வரியை பாடாமல் முணுமுணுத்துவி்ட்டு, கடைசி 2 வரிகளை மட்டும் சத்தமாக பாடிவிட்டு சிரித்துக் கொண்டே அமைச்சர் இருக்கையில் அமர்ந்தார். இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் 'எல்கேஜி' திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளை நினைவுகூர்ந்து சிரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in