

திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்துக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அருகிலுள்ள வேய்ந்தான்குளத்தின் கரைதிறந்தவெளி கழிப்பிடமாக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இங்கிருந்து, தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, சங்கரன்கோவில், பாபநாசம் போன்ற ஊர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள், பெருமாள்புரம் விலக்கு அருகேயுள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதுபோல், பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரேயுள்ள திடலில் இருந்து, மதுரை உள்ளிட்ட தொலைதூரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்விரு தற்காலிக பேருந்து நிலையங்களிலும் கழிப்பிடம், குடிநீர், நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
இங்குள்ள கழிப்பிடத்திலிருந்து கழிவு நீர் வெளியேறி, சுற்றிலும் தேங்கியிருப்பதால், பெரும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதுபோல், குடிநீர் வசதியும் சரிவர செய்யப்படவில்லை. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் பயணிகளுக்கு நிழலுக்கு ஒதுங்க போதியளவு கூரைகள் அமைக்கப்படவில்லை. மழை பெய்தால் தண்ணீர் குளம்போல் தேங்கிசேறும் சகதியுமாக தற்காலிக பேருந்து நிலையங்கள் உருமாறி விடுகின்றன. பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு ஊருக்குசெல்லவும், தனித்தனியான இடங்களுக்கு பயணிகள் அலைக்கழிக் கப்படுகிறார்கள்.
தற்காலிக பேருந்து நிலையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்பதால், அருகிலுள்ள வேய்ந்தான்குளத்தின் கரைகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயணிகள் மாற்றிவிட்டனர்.
கடைகளில் இருந்து கழிவுகளையும் இங்குதான் கொட்டுகிறார்கள். மதுபான பாட்டில்கள் நூற்றுக்கணக்கில் குளத்தில் வீசப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்களும் நடைபெறுகின்றன. இதற்கு அடையாளமாக பல்வேறு பொருட்களும் குளத்தின் கரைகளில் கிடக்கின்றன.
கடந்த 2019-ல் இந்த குளத்தைமேம்படுத்தி பறவைகள் தங்குவதற்கு மணல் திட்டுகளை உருவாக்கியிருந்தனர். மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டு சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தன. குளம் தூர்வாரி, செப்பனிடப்பட்டதால் அடுத்துவந்த பருவமழைக் காலத்தில் குளத்தில் பெருமள வுக்கு தண்ணீர் பெருகியது.
ஏராளமான பறவைகளும் வந்து தங்கியிருந்தன. ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. குளத்தின்கரைகள் திறந்தவெளி கழிப்பிடமாக்கப்பட்டிருப்பதாலும், குளத்தினுள் குப்பைகளையும், மதுபாட்டில்களையும் கொட்டுவதாலும் பறவைகள் இங்குவந்து தங்கவில்லை என்று பறவை ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.