கோப்புப்படம்
கோப்புப்படம்

பேரணாம்பட்டில் பொம்மை துப்பாக்கிகளுடன் சிக்கியவர் சென்னை காவல் துறையால் தேடப்படும் முக்கிய குற்றவாளி: லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் என தகவல்

Published on

பேரணாம்பட்டில் காரில் பொம்மை கைத்துப்பாக்கி, கத்தியுடன் சிக்கிய நபர் சென்னையில் ஆயுத தடை சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி என தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு அடுத்த மத்தூரில் நேற்று முன்தினம் விபத்தை ஏற்படுத்திவிட்டு அதிவேகத்தில் நிற்காமல் சென்ற காரை பொதுமக்கள் விரட்டிச் சென்று சுற்றிவளைத்தனர். காரில் மதுபோதையில் இருந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொம்மை துப்பாக்கிகள்...

அப்போது, அவர் வந்த காரை சோதனையிட்டதில் 2 கைத்துப்பாக்கிகள், 2 கத்தி, ஒரு கையெறி குண்டு, வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள், பாஜக கொடி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங் களில் முதல்வர் பேசிக் கொண்டி ருந்ததால் சல சலப்பு ஏற்பட்டது.

இந்த தகவலறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் விரைந்து சென்று விசாரணை செய்தார். மேல்பட்டி காவல் நிலையத்தில் வைத்து பிடிபட்ட நபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பேரணாம்பட்டு லால் மஜித் நகரைச் சேர்ந்த அஜிஸ் என்ற இம்ரான் என தெரியவந்தது. காரில் இருந்தது பொம்மை துப்பாக்கிகள் என்றும் கையெறி குண்டாக இருந்தது சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் என்றும் தெரியவந்தது.

மதுபோதை தெளிந்த நிலையில் அவரிடம் காவல் அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். அதில், அவர் சென்னை மாநகர காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, ‘‘இம்ரான் சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர். மணலியில் இருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக செய்து வரும் குற்றவாளி. கொலை முயற்சி வழக்கு ஒன்றிலும் தேடப்படும் நபர். சில பாஜக பிரமுகர்களுக்கு கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். கஞ்சா வழக்கிலும் தொடர்புடையவர்.

சென்னை கொடுங்கையூர், மீஞ்சூர், கும்பகோணம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை யில் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவாகி உள்ளது. பல வழக்குகளில் தொடர்புடைய இவர் சென்னை மாநகர காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி. காவல் துறைக்கு பயந்து பேரணாம்பட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

கஞ்சா வியாபாரம்...

பேரணாம்பட்டு பகுதியில் கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வி.கோட்டா சாலையில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றபோது மிதிவண்டியில் சென்றவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். பொது மக்களிடம் சிக்கியதால் தேடப்படும் குற்றவாளி காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார்.

நிலுவையில் உள்ள வழக்கு களில் அவர் சென்னை மாநகர காவல் துறையால் விரைவில் கைது செய்யப்படுவார்’’ என்று தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in