Published : 17 Nov 2015 12:22 PM
Last Updated : 17 Nov 2015 12:22 PM

தமிழகத்தில் மாற்று அரசியலை மலரச் செய்ய வேண்டும்: தமிழருவி மணியன்

தமிழகத்தில், ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயற்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடிக் கண்டுபிடித்து மாற்று அரசியலை மலரச் செய்ய வேண்டும் என தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரத்தைச் சிங்கப்பூராக்குவோம் என்று கடந்த 48 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி பீடத்தை அலங்கரித்து வரும் இரண்டு திராவிடக் கட்சிகளும் வாக்குறுதி வழங்கின.

ஆனால், 5 நாட்கள் பெய்த சாதாரண மழையைக் கூடத் தாங்க முடியாமல் இன்று ஒட்டுமொத்த சென்னையும் தத்தளிக்கிறது.

2005-ல் பெய்த பெருமழையில் விளைந்த கடும் சேதங்களைக் கண்ட பின்பும் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் முறையாக மழைநீரைச் சேகரிக்கவும், பழுதடைந்த கால்வாய்களைக் கட்டமைக்கவும், நீர்நிலைகளைத் தூர் வாரவும் உருப்படியாக எந்தப் பணியும் செய்யப்படவில்லை .

நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட 40 ஆயிரம் நீர்நிலைகளில் பெரும்பாலானவை இந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் தீவிர ஆக்கிரமிப்புக்குள்ளாயின.

தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள தாழ் நிலங்களெல்லாம் வீடுகட்டும் இடங்களாக மாற்றப்பட்டன. தமிழகத்தில் பாயும் 17 சிறிய, பெரிய ஆறுகள் ஒன்றிணைக்கப்படுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

தாமிரபரணி, கருமேனி, நம்பியாறு இணைப்புத் திட்டம் இன்றுவரை முழுமைப்பெறாமல் முடங்கிக்கிடக்கிறது. சரியான திட்டமிடல் இன்மையால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 177 டி.எம்.சி. தண்ணீர் பயன்பாடின்றி வீணாகிறது.

இந்த நிலையில் வெள்ள நிவாரணப் பணிகளால் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை.

புதிது புதிதாய் இலவசத் திட்டங்களை அறிவித்து வாக்கு வங்கியை வளர்த்தெடுப்பதைத் தவிர இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மக்கள் நலன் காக்கும் திட்டங்களைத் தீட்டுவதில் எந்த அறிவியல் பார்வையும் இல்லை.

சீரழிந்து கிடக்கும் சென்னை சீர்பட, தண்ணீரில் மிதக்கும் கடலூர் இயற்கைப் பேரிடரிலிருந்து நிரந்தரமாக விடுபட, மழை நீர் வீணாகாமல் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்பட தமிழக வாக்காளர்கள் முதலில் முடிவெடுக்க வேண்டும்.

ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயற்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடிக் கண்டுபிடித்து மாற்று அரசியலை மலரச் செய்ய வேண்டும். ஆயிரம் தவறுகள் இருந்த போதிலும் அரசியல் கருத்து வேற்றுமைகளை மீறி, நிவாரணப் பணிகளில் அனைவரும் ஒன்றினைந்து ஈடுபடுவது தான் இன்றைய அவசரத் தேவை. காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களும் தங்களால் இயன்ற அளவு விளம்பர வெளிச்சமின்றி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x