

தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்பட்டது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானல் எஸ்.மனோஜ் இமானுவேல், மதுரை ஆரப்பாளையம் முத்துச்செல்வம் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
மேகமலை வனப்பகுதியில் கடந்த 6 மாதங்களில் 8 யானைகள் உயிரிழந்துள்ளன. தமிழகத்தில் 2018-ல் மட்டும் 84 யானைகள் இறந்துள்ளன. 2019-ல் 61 யானைகள் உயிரிழந்துள்ளன.
வனப்பகுதியில் வாழும் யானைகள் தந்தங்களுக்காக கொலை செய்யப்படுகின்றன. இதுபோன்ற செயல்களால் யானை இனமே அழியும் அபாயம் உள்ளது. எனவே தந்தங்களுக்காக யானைகள் கொலை செய்யப்படுவது குறித்து தேசிய வன விலங்கு குற்றத்தடுப்பு பிரிவு அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் தமிழக வனப்பகுதியில் விலங்குகளை கொன்று உடல்களை கடத்துவது தொடர்பாக சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்கக்கோரி திருச்சி நித்ய செளமியா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வனவிலங்கு குற்றத்தடுப்பு சிறப்புப் பிரிவு தாக்கல் செய்த மனுவில், யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்படுவது மற்றும் தந்தங்களின் விற்பனை என்பது சர்வதேச அளவில் நடைபெறுகிறது. இது மிகப்பெரியளவில் நடைபெற்று வருகிறது.
கேரளாவில் 300 தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், தமிழகத்தில் பல யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளது என வாக்குமூலம் அளித்துள்ளனர் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், வனப்பகுதியில் வாழும் விலங்கினத்தில் யானை மிகவும் முக்கியமான. யானைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
அத்தகைய யானைகளை அவற்றின் தந்தங்களுக்காக வேட்டையாடுவதை ஏற்க முடியாது. யானைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படும் சம்பவங்களில் பலருக்கு தொடர்பிருக்கும் நிலையில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யானைகள் கொல்லப்படும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். எனவே தமிழகம் தாண்டிய விசாரணை தேவைப்படுகிறது.
எனவே தமிழகத்தில் நடைபெற்ற யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்தது தொடர்பாக மின் வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர், விசாரணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பட்டது