Published : 10 Feb 2021 06:55 PM
Last Updated : 10 Feb 2021 06:55 PM

திருப்பூர் மேம்பால நடைபாதைகளில் முதல்வர் வரவேற்புப் பதாகைகள்: பொதுமக்கள் அதிருப்தி

நடைபாதையை ஆக்கிரமித்த பதாகையால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் | படங்கள்: இரா.கார்த்திகேயன்

திருப்பூர்

திருப்பூர் மேம்பால நடைபாதைகளில் முதல்வர் வரவேற்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, அனைத்து கட்சிகளும் ஆரம்பக்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளன. இந்நிலையில், திருப்பூரில் நாளை (பிப்.11) மற்றும் நாளை மறுநாள் (பிப்.12) ஆகிய இருநாட்கள் தமிழக முதல்வர் பழனிசாமி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அவிநாசியில் தொடங்கி திருப்பூர் மாநகர், காங்கயம் எனப் பல்வேறு இடங்களில் பேச உள்ளார்.

இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் மாவட்டம் முழுவதும் வெகு விமரிசையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகரில் வழிநெடுக முதல்வரை வரவேற்றுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் நடக்கும் நடைபாதைப் பகுதியிலும் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

இதுதொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ’’திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிப் பிரச்சாரத்துக்காக, தமிழக முதல்வர் திருப்பூர் வருகிறார். இதற்காக ரயில்வே மேம்பாலம், வளர்மதி பாலங்களில் உள்ள பொதுமக்கள் நடைபாதைகளில் அதிமுக சார்பில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் வளர்மதி பாலத்தில் பொதுமக்கள் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள வரவேற்புப் பதாகைகள்,

ஏற்கனவே திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்து வரும் நிலையில், இந்த பதாகைகள் பொதுமக்கள் நடமாடும் சாலை மற்றும் நடைபாதைகளில் வைக்கப்பட்டிருப்பது அனைவரையும் சிரமத்தில் ஆழ்த்தி உள்ளது’’ என்றனர்.

இதுதொடர்பாகச் சமூக ஆர்வலர் சே.பாலசுப்பிரமணியம் கூறும்போது, ’’பதாகைகளால் தமிழகத்தில் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனினும் திருப்பூர் மாநகரில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளில் பதாகைகள் வைத்திருப்பது, உள்ளபடியே வருத்தத்தைத் தருகிறது. இனிவரும் காலங்களில் அனைத்துக் கட்சிகளும் இந்த கலாச்சாரத்தைத் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார், ’’இது தொடர்பாகப் பொதுமக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x