

நீதிமன்றத்துக்குள்ளும், வராண்டாவிலும் போராட்டம் நடத்தியது மற்றும் உயர் நீதிமன்ற வளாகத்தில் மது அருந்தியதால் 20 வழக்கறிஞர்களுக்கு இடைக்கால தடை விதித்து தமிழ்நாடு பார் கவுன்சில் நேற்று உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய 2 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 10 வழக்கறிஞர்கள், ஹெல்மெட் கட்டாய உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தியது தொடர்பாக மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, வராண்டாவில் நீதித்துறைக்கு எதிராக கோஷமிட்ட 7 வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற வளாகத்தில் மது அருந்திய 3 வழக்கறிஞர்கள் என மொத்தம் 20 வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் தொழில் செய்ய இடைக்கால தடை விதித்து தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன் சில் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செப்டம்பர் 14-ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் சட்டத்துக்கு புறம்பாகவும், தொழில் தர்மத்துக்கு எதிராக வும் செயல்பட்ட வழக்கறிஞர்கள் மதுரையைச் சேர்ந்த கே.ஜி.பகவத் சிங், வி.முருகன், எம். அய்யப்பன், சி.எழிலரசு, பாரதி, பொற்கொடி, சென்னையைச் சேர்ந்த எஸ்.செந்தமிழ் செல்வன், எம்.செல்வ குமார், முதுகுளத்தூரைச் சேர்ந்த வி.திசை இந்திரன், நாகபட்டி னத்தைச் சேர்ந்த பி.சிவசந்திரன் ஆகிய 10 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளக்கம் கேட்டு அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு, முறையான பதில் அளிக்கவில்லை.
அதுபோல, வழக்கறிஞர்கள் எஸ்.ஜிம்ராஜ் மில்டன், எஸ்.பார்த்தசாரதி, எஸ்.மகேந் திரன், எஸ்.மகாவீர் சிவாஜி, டி.வின் சென்ட் பிரபாகர், பி.உமா சங்கர், கே.கேசவன் ஆகிய 7 பேர் செப்டம்பர் 16-ம் தேதி, மதுரை யைச் சேர்ந்த இரண்டு வழக்கறி ஞர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, நீதிமன்ற வராண்டாவில் கூடிநின்று நீதித்துறைக்கு எதிராக கோஷ மிட்டனர் நீதிமன்றத்துக்குள் நுழை யவும் முயன்றனர். நீதிமன்ற பணிகளுக்கு இடையூறாகவும் நடந்து கொண்டனர். இதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தின் பின்புறம் அமர்ந்து மது அருந்திய இ.முருகன், டி.விஜய், சி.விஜய் ஆகிய 3 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய செயல்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் இனிமேல் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்ட இந்த 20 வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது பார் கவுன்சிலின் கடமை.
பொதுநலன் கருதியும், நீதிமன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்ற வும், 20 வழக்கறிஞர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை முடி வடையும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.