

திருச்சி உறையூரில் உள்ள அமைச்சர் வீட்டை இன்று சீர்மரபினர் நலச் சங்கத்தினர் முற்றுகையிடச் சென்றதால் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவான எஸ்.வளர்மதி, மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக உள்ளார். இவரது வீடு உறையூர் மின்னப்பன் தெருவில் உள்ளது.
இந்தநிலையில், இன்று காலை சீர்மரபினர் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதன் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் அமைச்சர் வளர்மதியின் வீட்டை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடச் சென்றனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளான காசிமாயத் தேவர், கேபிஎம்.ராஜா, எஸ்.பிரேம்குமார், சிவசக்தி, முத்துராம லிங்கம், பிரகாஷ், முருகன், தமிழ்ச்செல்வன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸாரோ, அவர்களை அமைச்சரின் வீட்டருகே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, அமைச்சர் வீட்டில் இல்லை என்று கூறித் திருப்பி அனுப்ப முயன்றனர். ஆனால், அமைச்சரைச் சந்திக்காமல் செல்லமாட்டோம் என்று கூறி அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் அமைச்சரின் வீட்டருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த அமைச்சர் எஸ்.வளர்மதி, அவர்களை தனது வீட்டில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டார். மேலும், கோரிக்கை மனுவை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
அமைச்சரிடம் சீர்மரபிரனர் நலச் சங்கத்தினர் அமைச்சரிடம் அளித்த மனுவில், “தமிழ்நாட்டில் 68 சாதிகளைச் சேர்ந்த சீர்மரபின மக்களுக்கு டிஎன்டி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில், 1979-ல் டிஎன்சி என்று மாற்றப்பட்டது. இதனால், கல்வி உட்பட பல்வேறு சலுகைகள் பறிபோயின. இதுகுறித்து மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று 2019-ல் மீண்டும் டிஎன்டி என்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆனால், அதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து டிஎன்சி என்றும், மத்திய அரசுத் தேவைகளுக்கு டிஎன்டி என்றும் கருதப்படும் என்று இரட்டைச் சான்றிதழ் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த இரட்டைச் சான்றிதழ் முறையைத் திரும்பப் பெற்று, டிஎன்டி என்ற சான்றிதழை வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.