

சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவகங்கை மேலபூவந்தியைச் சேர்ந்த முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறேன். தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுடன் நேரடியாக தொடர்புடைய அரசு அலுவலர்களில் சொந்த மாவட்டங்களில் பணிபுரிபவர்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசங்களில் 2019-ல் தேர்தல் நடைபெற்ற போது சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்த சார்பு ஆய்வாளர்கள் அதே மாவட்டத்தில் வேறு காவல் துணை கோட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யும் போது வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. உடல் நிலையும், மனநிலையும் பாதிக்கப்படும். எனவே, சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதி, தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு இடமாறுதல் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. நீதிமன்றம் தலையிட்டால் தேர்தல் நடவடிக்கைகளில் பெரும் தாக்கம் ஏற்படும். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.