

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், உரிய காலத்தில் இழப்பீடு கிடைக்காமல் நுகர்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரையிலும் இயங்கி வருகிறது. காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்படுவோர், நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெறலாம்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான இந்த ஆணையங்களில், பாதிக்கப்பட்டோர் நேரடியாக மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறவும் வழிவகை உள்ளது. இதில், நிவாரணம் கோரும் தொகை ரூ.1 கோடி வரை இருந்தால், மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரலாம். நிவாரணத் தொகை ரூ.10 கோடி வரை உள்ள வழக்குகள் மற்றும் மாவட்ட ஆணைய தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்குகள், மாநில நுகர்வோர் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வந்தன.
திருப்பூர் மாவட்டத்தில் நுகர்வோர் நீதிமன்றம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து, கடந்த 2018 மார்ச் மாதம் புதிதாக நுகர்வோர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு தலைவர் நியமிக்கப்படவில்லை. இதேபோல, உதகையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக தலைவர் நியமிக்கப்படவில்லை.
அதிகரிக்கும் வழக்குகள் நிலுவை
கோவை நுகர்வோர் ஆணையத்தின் தலைவராக இருந்த ஏ.பி.பாலசந்திரன் திருப்பூர், நீலகிரி மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளையும் சேர்த்து விசாரித்து வந்தார். வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கோவையில் விசாரணை மேற்கொண்ட அவர், வியாழன் அன்று திருப்பூருக்கும், வெள்ளிக்கிழமை உதகைக்கும் பயணித்து வழக்குகளை விசாரித்து வந்தார். இதனால், கோவையில் முழுநேரம் வழக்குகளை விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், அவரும் கடந்த ஜனவரி 11-ம் தேதி பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆணையத்திற்கு தலைவர் இல்லாததால், கடந்த ஒரு மாதமாக 3 மாவட்டங்களிலும் வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை. இதனால், கோவையில் மட்டும் தற்போதுவரை சுமார் 1,200 வழக்குகளும், 300 உத்தரவு நிறைவேற்று மனுக்களும் (இபி) நிலுவையில் உள்ளன. இதேபோல, உதகை, திருப்பூரிலும் உரிய காலத்தில் இழப்பீடு கிடைக்காமல் நுகர்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நம்பிக்கை குறையும்
இது தொடர்பாக, 'கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' செயலாளர் கே.கதிர்மதியோன் கூறும்போது, "மற்ற நீதிமன்றங்களைப் போல் அல்லாமல் விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நுகர்வோர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி நுகர்வோரின் புகார் மனு அல்லது மேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வேண்டும்.
ஆனால், இதுபோன்ற காலிப்பணியிடங்களை நீண்ட காலம் நிரப்பாமல்போவதாலும், விசாரணை காலதாமதம் ஆவதாலும் நுகர்வோர் நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைகிறது. ஒரு ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெறப்போகிறார் என்பது அரசுக்கு முன்னரே தெரிந்த விஷயம். எனவே, முன்கூட்டியே அந்த இடத்துக்கானவர்களை தேர்வு செய்யாமல் நுகர்வோர் நலனில் அரசு அக்கறை இல்லாமல் உள்ளது" என்றார்.