Last Updated : 10 Feb, 2021 04:56 PM

 

Published : 10 Feb 2021 04:56 PM
Last Updated : 10 Feb 2021 04:56 PM

அதிமுகவா, திமுகவா? யார் உண்மையைப் பேசுகிறார்கள் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி.

திருப்பத்தூர்

அதிமுகவா, திமுகவா? யார் உண்மையைப் பேசுகிறார்கள் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என, முதல்வர் பழனிசாமி திருப்பத்தூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.

தமிழக முதல்வர் பழனிசாமி 5-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதில், 3-ம் நாளான இன்று (பிப். 10) திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூரில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆம்பூர், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி அருகே பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

"2011-ம் ஆண்டில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு செய்து வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திருப்பத்தூரைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை நிறைவேற்றும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

அதேபோல, திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வரவேண்டும் என மக்கள் விடுத்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, ஊத்தங்கரை முதல் வாணியம்பாடி கூட்டுச்சாலை வரை ரூ.299 கோடி மதிப்பில் 4 வழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளும் தொடங்கியுள்ளன. பிற அரசு அலுவலகங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செய்து வருகிறது.

இது தெரியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை மக்கள் முன் பரப்பி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு என்ன செய்தது என ஸ்டாலின் கேட்கிறார். நாங்கள் சொன்னதைச் செய்ததால்தான் மக்கள் முன் நெஞ்சை நிமர்த்தி செய்த திட்டங்களைக் கூறி வருகிறோம். ஆனால், வாயைத் திறந்தாலே பொய்யான தகவல்களை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு பொய் பேசுவதற்காக நோபல் பரிசு வழங்கலாம் என்றால் அது மு.க.ஸ்டாலினுக்கு வழங்கலாம். 10 ஆண்டுகளாக திமுக 7 பேரின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருவதாக பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுகவா, திமுகவா? யார் உண்மையைப் பேசுகிறார்கள் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.

நான் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, 6 மாதங்கள் தாங்காது என ஸ்டாலின் கூறினார். ஆனால், 4 ஆண்டுகள் முடிந்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதைப் போல இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், தமிழகத்தில் அதிமுக அரசுதான் நடைபெறும்.

அடுத்த 10 நாட்களில் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க 1100 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது குறைகளைத் தெரிவித்தால் உடனடியாகத் தீர்க்கப்படும். தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டி மத்திய அரசு 143 விருதுகளை வழங்கியுள்ளது. எனவே, மக்களுக்கான அரசாக அதிமுக அரசு என்றும் செயல்படும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

தொழுகைக்காக பிரச்சாரத்தை நிறுத்திய முதல்வர்

முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அங்குள்ள மசூதியில் தொழுகை நடைபெற்றது. ஒலிபெருக்கியில் தொழுகை நடைபெறுவதைக் கேட்ட முதல்வர் பழனிசாமி, தனது பிரச்சாரத்தை 3 நிமிடங்களுக்கு நிறுத்தினார். பொதுமக்களிடம் சற்று நேரம் அமைதியாக இருக்கும்படி சைகையில் கூறிய முதல்வர், தொழுகை முடிந்த உடன் மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதைக் கண்ட மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x