

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அரசு கொடுத்த பொங்கல் பரிசுப் பணத்தில் ரூ.50 லட்சம் கையாடல் செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப் பணம், கரும்பு, சர்க்கரை போன்ற பொருட்களை வழங்கி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகப் பணம் ஒதுக்கப்பட்டு கூட்டுறவுத் துறையின் கீழ் நியாயவிலைக் கடைகள் மூலம் பணம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரியில் வசிக்கும் மக்களுக்கு 2019-ம் ஆண்டு பொங்கல் பரிசு வழங்க ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் பணத்தை தமிழக அரசு ஒதுக்கியது.
அதில், பொங்கல் பரிசுப் பொருட்கள் வாங்கியதுபோக மீதம் ரூ.51 லட்சம் இருந்தது. இந்தப் பணத்தை கூட்டுறவு சங்க அதிகாரிகள் கையாடல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசியத் தகவல் தகவல் கிடைத்தது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அரசுப் பணத்தைக் கையாடல் செய்வதற்காக 17 விவசாயிகளிடம் இருந்து ரூ.51.3 லட்சத்துக்கு கரும்புகள் வாங்கியதாக போலியான விற்பனை ரசீதுகள் தயார் செய்து தாக்கல் செய்துள்ளனர். பின்னர் 2019-ம் ஆண்டு ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை 10 காசோலைகள் மூலம் ரூ.50 லட்சம் பணத்தை மோகன் பெற்றுள்ளார். பிரபாகரன், மோகன், மகேஷ்வரி ஆகிய 3 பேரும் சேர்ந்து இந்தப் பணத்தைக் கையாடல் செய்துள்ளனர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டக் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பிரபாகரன், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கங்களின் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) மோகன், பொது மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் அரசுப் பணத்தைக் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் 3 பேரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
மேலும் நடந்த விசாரணையில், கிருஷ்ணகிரியில் உள்ள முதன்மை வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் 48 விற்பனையாளர்களை நியமிப்பதிலும் பிரபாகரனும், மோகனும் முறைகேடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.