

தனக்கு வேலை வழங்காவிட்டால், பெட்ரோல் பாம் வீசி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தகர்ப்பேன் என டிஜிபி அலுவலகத்தில் மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா எம்ஜிஆர் சமாதிக்கு அருகில் உள்ளது. இந்த நினைவிடம் சமீபத்தில் திறக்கப்பட்டது. தற்போது அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா போன்ற இடங்களில் பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் பராமரிப்புப் பணிக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடத்தில் தற்போது பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் வருவதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர், சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்தார்.
பொதுவாக டிஜிபி அலுவலகத்தில் முக்கியப் பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். புகார்கள் பெரிய அளவில் இருந்தால் மட்டுமே ஏஐஜி பார்ப்பார். தேவை என்றால் உயரதிகாரிகளைப் பார்க்க அனுமதி கிடைக்கும். இந்நிலையில் மாலை நேரமாகி விட்டதால் வந்த இளைஞரை போலீஸார் தடுத்து என்னவென்று விசாரித்துள்ளனர்.
புகார் கொடுக்க வேண்டும், எனக்கு அரசு வேலை வேண்டும். அதற்காக மனு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
போய்விட்டு காலையில் வாருங்கள், இப்போது யாரையும் பார்க்க அனுமதி இல்லை. தவிர வேலை கொடுக்கும் அலுவலகமும் இது இல்லை, சி.எம். செல்லுக்குப் போய் வேலை கேட்டு மனு கொடுங்கள் எனப் பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் கூறியுள்ளனர்.
எனக்கு அரசு வேலை வழங்காவிட்டால் பெட்ரோல் பாம் வீசி ஜெயலலிதா நினைவிடத்தைத் தகர்த்துவிடுவேன் என்று அந்த இளைஞர் மிரட்டியுள்ளார். இதனால் திடுக்கிட்டுப் போன போலீஸார் உடனடியாக மெரினா காவல் நிலையத்துக்குப் புகார் அளித்து போலீஸாரை வரவழைத்து இளைஞரை ஒப்படைத்தனர்.
அவரைப் பிடித்த மெரினா போலீஸார், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்ட பிரசாத் (27) எனத் தெரியவந்தது. மன உளைச்சல் காரணமாக அவ்வாறு போலீஸாரிடம் பேசிவிட்டதாக அவர் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார்.
மாற்றுத்திறனாளி இளைஞர் என்பதால் அவரது நிலையைக் கருத்தில் கொண்டு எழுதி வாங்கிக்கொண்டனர். பின்னர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.