மாணவர்கள் பாதிப்பு; கன்னிமாரா பொது நூலகத்தை முழுநேரமும் செயல்படுத்துக: சிபிஎம் வலியுறுத்தல்

கன்னிமாரா நூலகம்: கோப்புப்படம்
கன்னிமாரா நூலகம்: கோப்புப்படம்
Updated on
1 min read

கன்னிமாரா பொது நூலகத்தை முழுநேரமும் செயல்படுத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (பிப். 10) வெளியிடப்பட்ட அறிக்கை:

"சென்னை கன்னிமாரா பொது நூலகம் தற்போது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது. திரையரங்குகள், டாஸ்மாக், நீச்சல் குளம், கடற்கரை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முழுமையான தளர்வுகளை அறிவித்துள்ள சூழலில், அரசு பொது நூலகங்களும் முழுமையான தளர்வுகளுடன் செயல்பட தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது ஊரடங்கு காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நூலகம் இயங்குவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னை நகரத்தில் தங்கி மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கக்கூடிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, சுமார் 200 மாணவர்கள் தமிழக முதல்வருக்கு ஜனவரி 27 ஆம் தேதி மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே, இனியும் காலம்தாழ்த்தாமல் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கன்னிமாரா பொது நூலகத்தை கரோனா காலத்துக்கு முன்பிருந்தது போல முழுநேரமும் (காலை மணி 8 முதல் இரவு 8 மணி வரை) செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கேற்றாற்போல், நூலக ஊழியர்களுக்கும் முன்பிருந்த மூன்று ஷிப்ட் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in