Published : 10 Feb 2021 11:34 AM
Last Updated : 10 Feb 2021 11:34 AM

காங்கிரஸ் பாதையில் வழுவாமல் நடந்த சிவாஜியின் மகன் பாஜகவில் இணையலாமா?- காங்கிரஸ் கலைப்பிரிவு கேள்வி

சென்னை

காங்கிரஸ் கட்சித் தலைவராக, காமராஜரின் சீடராக, பக்தராகக் கடைசிவரை வாழ்ந்து மறைந்த சிவாஜியின் புதல்வர், பெருந்தலைவரைக் கொல்ல முயன்ற கூட்டத்தின் பின்னணியில் செயல்படும் கட்சியில் இணைவது எந்த வகையிலும் சிவாஜியின் புகழுக்குப் பெருமை சேர்க்காது என காங்கிரஸ் கலைப்பிரிவுத் தலைவர், சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர் ராம்குமார், பாஜகவில் இணையவிருப்பதாக வரும் தகவல்கள் அறிந்து வேதனையும் வருத்தமும் அடைந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிடும் உரிமை உண்டு என்றாலும், இப்போது சிவாஜி கணேசனின் புதல்வர் சேரவிருப்பது பாஜகவில் என்பதுதான் முரண்பாடான விஷயமாக இருக்கிறது.

ஏனெனில், நடிகர் திலகம் சிவாஜி, என்றுமே தேசிய உணர்வோடு மதச்சார்பற்ற தலைவராகவும் திகழ்ந்தவர் என்பது அவரோடு பழகிய, பயணித்த என்னைப் போன்றோருக்குத் தெரியும். “இந்திய நாடு என் வீடு – இந்தியன் என்பது என் பேரு – எல்லா மதமும் என் மதமே, எதுவும் எனக்குச் சம்மதமே” என்பது சிவாஜியின் திரைப்படப் பாடல் மட்டுமல்ல, அவருடைய உள்ளத்தின் வெளிப்பாடும் அதுவே.

காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளியேறியபோதும், ஏன் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த போதும்கூட, காமராஜரின் பெயரை அவர் உச்சரிக்கத் தவறியதே இல்லை. அந்த அளவிற்கு காமராஜரின் சீடராக, பக்தராகக் கடைசிவரை வாழ்ந்து மறைந்த சிவாஜியின் புதல்வர், பெருந்தலைவரைக் கொல்ல முயன்ற கூட்டத்தின் பின்னணியில் செயல்படும் கட்சியில் இணைவது எந்த வகையிலும் நடிகர் திலகத்தின் புகழுக்குப் பெருமை சேர்க்காது.

காங்கிரஸ் பேரியக்கத்தைப் பொறுத்தவரை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டை, சச்சரவு போல - நீரடித்து நீர் விலகாது என்பதுபோல, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை ஆகியவற்றில் பெரிதும் நம்பிக்கையுடைய கட்சி. அந்த வகையில் கருத்து வேறுபாடுகளால் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வெளியேறிய சிவாஜி, அரசியலிலிருந்து விலகியிருந்தாரே தவிர காங்கிரஸின் கொள்கைகளிலிருந்து, காமராஜர் பற்றிலிருந்து என்றுமே விலகியதில்லை.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் தனிப்பட்ட முறையில் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்ததோடு மட்டுமல்ல, நேரு, காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி என அனைத்துத் தலைவர்களின் அன்பையும் பெற்றிருந்தார் சிவாஜி. தான் பதவியை விரும்பாதபோதும் தன்னுடைய மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு, காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் போட்டியிட வாய்ப்பு பெற்றுக் கொடுத்தார்.

அவர்களில் பலர் மக்களவை உறுப்பினர்களாக, சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். உதாரணத்திற்கு, அவரால் முதலில் சட்டப்பேரவை உறுப்பினரான, ஈவிகேஎஸ் இளங்கோவன், பின்னாளில் மத்திய அமைச்சராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார் என்பது வரலாறு.

எனவே, பாஜகவில் இணைவது என்ற சிவாஜியின் புதல்வருடைய முடிவு, சிவாஜியின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடியதாகத்தான் இருக்கும் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புவதோடு, என்னைப் போன்ற லட்சோப லட்சம் சிவாஜியின் ரசிகர்கள், காமராஜர் தொண்டர்களாக, அவர் காட்டிய பாதையான, காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிப் பணியில் தொடர்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x