Published : 11 Jun 2014 10:00 AM
Last Updated : 11 Jun 2014 10:00 AM

திமுக 6 பேர் குழு முதல் முறையாக கூடி அரை மணி நேரத்தில் கலைந்தது: அதிரடி நடவடிக்கை இருக்குமா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு

திமுகவின் உள்கட்சிப் பூசலைத் தீர்க்க அமைக்கப்பட்ட 6 பேர் குழு, அரை மணி நேரம் கூடி விவாதித்து கலைந்தது. இதனால் எதிர்காலத்தில் கட்சிக்குள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வருமா என்று தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக வேட்பாளர்கள் 34 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். 2 தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது.

இந்நிலையில், திமுகவினரின் மோசமான தோல்விக்கு வேட்பாளர் குளறுபடி, உள்கட்சிப் பூசல், மாவட்ட செயலாளர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டன. மேலும், இந்தத் தேர்தல் பணிகள் அனைத்தையும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினே முன்னின்று நடத்தியதால், தோல்விக்கான பொறுப்பு அவர் மீது விழுந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய முன்வந்தார்.

ஆனால், அவரை ராஜினாமா செய்ய வேண்டாமென்று திமுக தலைவர் கருணாநிதியும், தொண்டர்களும் கேட்டுக் கொண்டதால் தன் முடிவை கைவிட்டார். தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய திமுக உயர்நிலைக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 2-ம் தேதி நடைபெற்றது. இதில் திமுகவில் உள்கட்சி விவகாரங்களை சீர்படுத்தவும், எதிர்காலத்தில் நிர்வாகம் எளிமையாக நடக்கும் வகையிலும், மாவட்ட அமைப்புகளை சீரமைப்பது குறித்தும் குழு அமைத்து முடிவெடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜூன் 3-ம் தேதி நடந்த

கருணாநிதியின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அவர் தொண்டர்களை நோக்கி பேசும்போது, ‘உயர்நிலைக்குழு கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என எதிர்பார்த்தீர்களோ, அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 6 பேர் குழுவை திமுக தலைமை அறிவித்தது. இதில் கல்யாணசுந்தரம், திருவேங்கடம் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் 70 வயதைத் தாண்டிய மூத்த நிர்வாகிகள் ஆவர். சச்சிதானந்தம், வழக்கறிஞர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நடுத்தர வயது கொண்டவர்கள் ஆவர்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் நடந்தது. பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

கட்சியை எப்படி வலுப்படுத்தலாம், மாவட்ட அமைப்புகளை எத்தனை வகைகளில் பிரிக்கலாம், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் செயல்பாடு எப்படி, மாவட்டங்களில் கோஷ்டிப் பிரச்சினை போன்றவை குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களிலிருந்து வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கடிதங்களை வைத்தும், பல்வேறு மட்டத்தில் ஆய்வு செய்தும் அறிக்கை தயாரிக்க வேண்டும்.

குழு உறுப்பினர்கள் அடிக்கடி கூடி ஆலோசிக்க வேண்டும் என்று கூட்டத்தின் போது உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:

6 பேர் குழுவைப் பொறுத்தவரை கூடிக் கலையும் குழுவாகவே தெரிகிறது. மாவட்டங்களில் ஏதாவது தவறுகள் இருந்தால், அவற்றை இந்தக் குழுவிடம் கூற முடியாது. ஏனெனில் இந்தக் குழுவே ஸ்டாலின் முன்னிலையில் தான் செயல்படுகிறது. வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தால், இருக்கும் பதவியும் போய்விடுமோ என்ற அச்சத்தில் தொண்டர்கள் உள்ளனர்.

மேலும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு என்பது தங்களின் பிறப்புரிமை போல் பல மாவட்டச் செயலாளர்கள் கருதும் நிலையில், அவர்கள் மீது தவறுகள் இருந்தால் திமுக தலைமை உறுதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனவே, தொண்டர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வருமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x