Published : 10 Feb 2021 10:15 AM
Last Updated : 10 Feb 2021 10:15 AM

6,7,8-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிகள் திறக்கப்படுமா?

சென்னை

6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% அளவுக்குப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (State Council of Educational Research and Training, Tamil Nadu) அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் தொடருமா என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு அமலானதால் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் கல்வி கற்பது தடைபடுவதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் நிலையில், அவர்களுக்கான பாடத்திட்டம் 40% அளவுக்குக் குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக, 6,7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% அளவுக்குப் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (State Council of Educational Research and Training, Tamil Nadu) அறிவித்துள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த முழுத் தகவல்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்காகப் பள்ளிகள் செயல்படுவதுபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் பள்ளிக் கல்வித்துறை சற்று தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

காரணம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்ற மாணவர்களைப்போல் ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவர முடியாது. நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும் என்பதால் எளிதில் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்பதால் தயக்கம் காட்டப்படுகிறது.

இதனால் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க வேண்டுமென்றால், அவர்களுக்கென்று தனியாக ஒரு நிரந்தர வழிகாட்டு நெறிமுறை (Standard Operating Procedure- SOP) வெளியிட வேண்டியது அவசியம் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பது தகவல்கள் சாத்தியமல்ல. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் தொடரும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x