

புதுச்சேரியில் 2016-ல் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரண்பேடிக்கும் அரசுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.
இதற்கிடையே, முதல்வர் நாராயணசாமி மீதான அதிருப்தியால் அமைச்சர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்த நமச்சிவாயம் பாஜகவுக்கு சென்று விட்டார். கடைசி கட்டத்திலும், காலியாக உள்ள அமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அடி போடுகின்றனர்.
இப்பிரச்சினைகளால் தலை காய்ந்து நிற்கும் புதுவை காங்கிரஸுக்கு கூட்டணிக் கட்சியான திமுகவும் குடைச்சல் கொடுத்து வருகிறது. ‘இந்த ஆட்சியில் எந்த திட்டங்களும் நடக்கவில்லை; கிரண்பேடியை குறை சொல்லியே காலம் கடத்தி விட்டனர்’ என்று திமுக கூறிவருகிறது. மக்கள் நலத்திட்ட பணிகள் பலவும் முடங்கி போயுள்ளதால் புதுவை மக்களும் வெறுப்பில் உள்ளனர். அனைத்துப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள, ‘ஆளுநர் கிரண்பேடி தான் அத்தனை சிக்கலுக்கும் காரணம்’ என்ற அஸ்திரத்தை புதுவை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது
.
அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல், பொது விநியோகத்தில் அரிசி நிறுத்தப்பட்டது, பஞ்சாலைகள் மூடல், ஹெல்மெட் அபராதம் என பல விவகாரங்களில் கிரண்பேடியை கை காட்டி விடலாம்; அவரது செயல்பாடுகள் தங்களுக்கு கூடுதல் பலம் தரலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. இப்படியாக கிரண்பேடி ‘கை’ கொடுப்பார் என்று புதுச்சேரி காங்கிரஸ் நம்புகிறது.