

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி சேகரிக்கும் பணிகளை, கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள 'ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர' அறக்கட்டளை தொடங்கியுள்ளது.
இதை மக்கள் இயக்கமாக மாற்ற ஆர்எஸ்எஸ், பாஜக, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் முடிவு செய்து களமிறங்கியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், புதுச்சேரியில் நிதி சேகரிப்பை தேர்தல் பிரச்சாரமாக பாஜக மாற்றியுள்ளது. தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முதல் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் குறைந்தது 50 நபர்களை நேரில் சந்தித்து நிதி சேகரிக்க பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்கள், பிரபலங்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் பாஜகவினர் நிதி சேகரித்து வருகின்றனர். இதுதொடர்பாக ராமர் கோயில் நிதி சேகரிப்பு இயக்கத்தின் தமிழகப் பொறுப்பாளரான ஸ்தாணுமாலயனிடம் கேட்டபோது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிதியைத் திரட்டுவது மிக எளிதானது. கோயில் கட்டுவதற்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொள்ள தொழிலதிபர்கள் பலர் முன்வந்தனர். ஆனால், ராமர் கோயில் கட்டுமானப் பணியில் நாட்டு மக்கள் அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே ராமஜென்மபூமி தீர்த்த சேஷத்ர அறக்கட்டளையின் விருப்பம்.
அதற்காகவே நிதி சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளோம். இதற்காக ரூ.10, ரூ.100, ரூ.1,000 டோக்கன்கள் கொண்ட புத்தகம் அச்சடிக்கப்பட்டுளளது. நிதி சேகரிப்பவர் எவ்வளவு பெரிய தலைவராக, பணம் படைத்தவராக இருந்தாலும் குறிப்பிட்ட அளவு புத்தகமே கொடுக்கப்படும். எங்களுக்கு பணம் முக்கியமல்ல. அதிகமான மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதே முக்கியம்" என்றார்.