

சிறையில் இருந்து திரும்பிய சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்களில் தங்கள் விசுவாசிகளை இழுத்து சிக்கலை உருவாக்க அமமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூருவில் இருந்து வரும் வழியில் சசிகலா அளித்த பேட்டியில், ‘நான் தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்’ என்று கூறியுள்ளார். அதிமுக தரப்பில் சசிகலாவை இணைப்பது 100 சதவீதம் சாத்தியமில்லை என்று முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பலர் கூறி வந்தாலும், ஏற்கெனவே சசிகலா ஆதரவாளர்கள் என அறியப்பட்டவர்கள் யாரும் இதுவரை வாய்த்திறக்காமல் உள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
20 எம்எல்ஏக்கள்
இதற்கிடையில், அதிமுகவில் தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் 20-க்கும் மேற்பட்டவர்களை தங்கள் பக்கம் இழுத்து, அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்க அமமுக திட்டமிட்டுள்ளதாகவும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திடீரென நுழைந்து சசிகலா அதிர்ச்சி அளிப்பார் என்றும் அமமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதையொட்டியே அதிமுக அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்கள் சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தவும் அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த பிப்.6-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்
பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம், சசிகலா வருகை மற்றும் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விரிவாக ஒருங்கிணைப்பாளர்கள் பேசி
உள்ளனர்.
சுதந்திரம் பறிபோகும்
குறிப்பாக, சசிகலா குறித்து வெளியில் யாருடனும் பேச வேண்டாம் என உத்தரவிட்டுள்ளனர். அத்துடன், சசிகலா தரப்பினருடன் இருந்தபோது நடைபெற்ற நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி, தற்போது நான்கரை ஆண்டுகளாக கட்சி பொறுப்பில் இருப்பவர்கள், ஆட்சியில் அமைச்சராகவும், எம்எல்ஏக்களாகவும் இருப்பவர்கள் அனுபவித்த சுதந்திரம் குறித்தும் எடுத்து கூறினர்.
மேலும், மீண்டும் சசிகலா குடும்பம் வசம் கட்சி சென்றால் மீண்டும் சுதந்திரத்தை இழக்க வேண்டி வரும் என்பதையும் குறிப்பிட்டு, யாரும் அவர்கள் பக்கம் செல்ல வேண்டாம். சமீபத்தில் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு தேர்தலில் சீட் வழங்கவும் முடிவெடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதவிர, ஏற்கெனவே அங்கு சென்று வந்து தற்போது அதிமுகவில் பதவியில்லாமல் இருக்கும் பலருக்கும் பதவி மற்றும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படியும் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவ்
வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுச்செயலாளர் பதவி வழக்கு
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பெயரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவுக்கு நிரந்தரமாக வழங்கி, ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதற்காக அதிமுக சட்ட விதிகளும் திருத்தப்பட்டன.
இந்நிலையில், இந்த பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். குறிப்பாக, தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் நடவடிக்கையை சசிகலா தரப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.